கொடைரோடு அருகே நின்ற லாரி மீது வேன் மோதி தம்பதி பலி
கொடைரோடு அருகே நின்ற லாரி மீது வேன் மோதிய விபத்தில் தம்பதி பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த மகன், மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொடைரோடு,
திருப்பூர் செல்லம்நகரை சேர்ந்தவர் சவுந்திரபாண்டி (வயது 35). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவருடைய மனைவி முத்துலெட்சுமி (30). இவர்களுடைய மகன் ரோகித்குமார் (10), மகள் கீர்த்தனா (6). சவுந்திரபாண்டி குடும்பத்துடன் வேனில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
காரை சவுந்திரபாண்டி ஓட்டினார். நேற்று அதிகாலை திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள கொழிஞ்சிப்பட்டி பிரிவு என்ற இடத்தில் வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.
அப்போது பின்னால் வந்த கார் ஒன்று வேன் மீது மோதியது. இதில், இரு வாகனங்களுக்கும் இடையே சிக்கிய வேன் அப்பளம் போல் நொறுங்கியது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் முத்துலெட்சுமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.மேலும் சவுந்திரபாண்டி உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் கருப்புசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் சிக்கிய சவுந்திரபாண்டி உள்பட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலியான முத்துலெட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சவுந்திரபாண்டியும் பரிதாபமாக இறந்தார். ரோகித்குமாரும், கீர்த்தனாவும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கன்டெய்னர் லாரியில் உள்ள டீசலை எடுத்து விற்பனை செய்வதற்காக சாலையோரத்தில் நிறுத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே விபத்து நடந்துள்ளது என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து கொடைரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.