திண்டுக்கல் அருகே விவசாயியை கழுத்தை நெரித்து கொன்று ஆடுகள் திருட்டு
திண்டுக்கல் அருகே விவசாயியை கொன்று ஆடுகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கன்னிவாடி,
திண்டுக்கல் அருகேயுள்ள குட்டத்து ஆவாரம்பட்டியை சேர்ந்தவர் சூசைமாணிக்கம் (வயது 75). விவசாயி. இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
சூசைமாணிக்கத்துக்கு குட்டத்து ஆவாரம்பட்டி பகுதியில் புஷ்பபுரம் என்னுமிடத்தில் தோட்டம் உள்ளது. அங்கு உள்ள வீட்டில் அவர் மட்டும் தனியாக வசித்து வந்தார். அங்கு 4 ஆடுகளை வளர்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவருடைய வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்தனர். அங்கு கட்டிலில் சூசைமாணிக்கம் தூங்கி கொண்டிருந்தார். அவருடைய கழுத்தை சேலையால் நெரித்து கொலை செய்தனர்.
பின்னர் அங்கு இருந்த 3 ஆடுகளை திருடி கொண்டு தப்பி சென்றனர். நேற்று காலையில் வெகுநேரமாகியும் சூசைமாணிக்கம் எழுந்திரிக்காததால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது கட்டிலில் அவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தடயவியல் நிபுணர்கள் வந்து பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். திண்டுக்கல்லில் இருந்து மோப்ப நாய் லிண்டா வரவழைக்கப்பட்டு சோதனை செய்தனர். அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயியை கொலை செய்து விட்டு ஆடுகளை திருடி கொண்டு தப்பியோடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.