மதுரை மேலூரில் இன்று நடக்கும் டி.டி.வி. தினகரன் பொதுக்கூட்டத்துக்கு இடையூறு: திவாகரன் குற்றச்சாட்டு

மதுரை மேலூரில் நடக்கவுள்ள டி.டி.வி.தினகரனின் பொதுக்கூட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் தொண்டர்களின் எழுச்சியோடுசமாளிப்போம் என்றும் திவாகரன் கூறினார்.

Update: 2017-08-13 23:00 GMT

மேலூர்,

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. அம்மா அணி பொதுச்செயலாளர்டி.டி.வி. தினகரன் முதன்முதலாக பங்கேற்கும் பொதுக்கூட்டம் மதுரை மேலூரில் இன்று(திங்கட்கிழமை) மாலை நடக்கிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள மேடையை திவாகரன் நேற்று மாலை பார்வையிட்டார். இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

அ.தி.மு.க. ஒரே அணியாகவே உள்ளது. அரசை எதிர்த்து எதுவும் சொல்லவில்லை. இதில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றனர். அமைச்சர்களை நம்பி அ.தி.மு.க. இல்லை. அமைச்சர்களால் ஏற்படும் வீழ்ச்சிகளை கட்சியின் அடிமட்ட தொண்டர்களும் நிர்வாகிகளும் தலைவர்களும் தான் சரிக்கட்டி எழுச்சியை ஏற்படுத்த வேண்டும்.

ஒரு வருடமாக கட்சியை படுக்கையில் வைத்திருந்தார்கள். அனைவரும் அ.தி.மு.க.வை திரும்பிப்பார்க்கும் வகையில் எழுச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற நிலைமை உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் மற்ற கட்சிகள் அ.தி.மு.க. வுடன் கூட்டணை வைத்திட தயங்கும் நிலை உள்ளது. இது வெளிப்படையான உண்மை. தொண்டர்கள் டி.டி.வி. தினகரன் பக்கம் உள்ளனர். தொண்டர்களின் எழுச்சியை பார்த்தபிறகுதான், அ.தி.மு.க. முழுமையாக இருக்கிறது என்பதை நிரூபித்தால்தான் மற்றவர்கள் கூட்டணிக்கு வருவார்கள்.

ஒரு பெண்மணிக்கு மற்றொரு பெண் துணையாக இருப்பது தவறா இதை விமர்சித்துள்ள முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி மீது வழக்கு தொடர இருக்கிறோம்.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை ஓ.பன்னீர்செல்வம் கொண்டாடினால் எந்த இடையூறும் செய்யாமல் பாதுகாப்போடு நடக்கிறது. ஆனால் ஒரே கட்சியில் இருப்பவர்கள் அந்த விழாவை நடத்த வெளியில் தெரியாத வகையில் பல்வேறு வகையில் இடையூறு செய்கிறார்கள். பொதுக்கூட்டம் நடத்தவிடாமல் இடையூறு செய்கிறார்கள். பஸ்களை வாடகைக்கு எடுத்து இருக்கும் நிலையில் மிரட்டி தடை ஏற்படுத்துகிறார்கள். இவை எல்லாம் முதல்–அமைச்சருக்கு தெரிந்து நடக்கிறதா அல்லது துதிபாடிகளின் செயலா என்று தெரியவில்லை.

அனைத்து சவாலையும் எதிர்ப்பையும் தொண்டர்களின் எழுச்சியோடு சமாளித்து தொண்டர்களின் எழுச்சியோடு அ.தி.மு.க. மீண்டும் பெரிய கட்சியாக உருவாக உறுதியான நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்