அம்பத்தூர் அருகே கால் டாக்சி டிரைவரை தாக்கி கார் கடத்தல் 3 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
அம்பத்தூர் அருகே கால் டாக்சி டிரைவரை தாக்கி, காரை கடத்தி சென்ற 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆவடி,
சென்னை வியாசர்பாடி, பக்தவச்சலம் காலனியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (வயது 36). தனியார் கால் டாக்சி நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று அதிகாலை 3 மணியளவில் அம்பத்தூர் எஸ்டேட் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தின் வாகன நிறுத்துமிடத்தில் தனது காரை நிறுத்திவிட்டு அதன் உள்ளே தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது 3 பேர் கொண்ட கும்பல் ஒரு மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் சாகுல் ஹமீதுவிடம் ‘‘எங்கள் நண்பர் அடிபட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவரை பார்க்க செல்ல வேண்டும். காரை எடுத்துக்கொண்டு வாருங்கள்’’ என்றனர்.
அதற்கு சாகுல் ஹமீது அவர்களிடம் ‘‘இந்த கார் வாடகைக்கு வேண்டும் என நீங்கள் எங்கள் நிறுவனத்தின் ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே என்னால் வர முடியும்’’ என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சாகுல் ஹமீதை வலுக்கட்டாயமாக பிடித்து காருக்குள் தள்ளினார்கள். பின்பு அந்த கும்பலை சேர்ந்த ஒருவரே காரை ஓட்டினார்.
அம்பத்தூரை அடுத்த திருவேங்கடம் நகர் அருகே சி.டி.எச் சாலையில் சென்றபோது காருக்குள் இருந்த சாகுல் ஹமீதை அந்த நபர்கள் சரமாரியாக தாக்கினார்கள். அவரிடம் இருந்து பணம், செல்போன்கள் ஆகியவற்றை பறித்துக்கொண்டு, அவரை கீழே தள்ளிவிட்டு காரை கடத்திச் சென்றனர்.
இதில் படுகாயம் அடைந்த சாகுல் ஹமீதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து சாகுல் ஹமீது அம்பத்தூர் எஸ்டேட் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாகுல் ஹமீதை தாக்கிவிட்டு காரை கடத்தி சென்ற 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.