மேம்பால தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
மேம்பால தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்தார்.
திருவொற்றியூர்,
வேளச்சேரி நேரு நகர், கண்ணகி தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் கார்த்திக் (வயது 22). அதே பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு திருவொற்றியூரில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் திருமண விழாவில் கலந்துகொண்டார். பின்னர் எர்ணாவூரை சேர்ந்த தனது நண்பர் இன்பசேகரன் (25) என்பவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு எர்ணாவூர் நோக்கி சென்றார்.
எர்ணாவூர் மேம்பாலத்தில் சென்றபோது அதன் தடுப்பு சுவரில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதனால் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த இன்பசேகரன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.