‘‘டி.டி.வி.தினகரன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன்’’ தம்பிதுரை பேட்டி

டி.டி.வி.தினகரன் நடத்தும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்று தம்பிதுரை கூறினார்.

Update: 2017-08-14 00:30 GMT

ஆலந்தூர்,

பாராளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க. (அம்மா) அணியின் மூத்த தலைவருமான தம்பிதுரை நேற்று டெல்லி செல்ல சென்னை விமான நிலையத்துக்கு வந்தபோது, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அ.தி.மு.க.வில் உள்ள அனைவருமே சின்னத்தை மீட்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.

எல்லா அரசியல் கட்சிகளிலுமே அணிகள் உள்ளன. எல்லா அணிகளிலுமே சின்னம் மீட்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

அ.தி.மு.க.வில் பிளவு என்பது இல்லை. பிளவு ஏற்பட்டிருந்தால் தேர்தல் வந்திருக்கும். அந்த நிலை வரவில்லை. நீட் தேர்வில் விலக்கு பெற வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் எண்ணம். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மு.க.ஸ்டாலின் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று கூறியுள்ளார். நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் போதே சட்டமன்றத்தில் ஸ்டாலின் செய்தது என்ன என்பது எல்லோருக்கும் தெரியும்.

அப்போதே அவர்கள் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து விட்டார்கள். தற்போது மீண்டும் கொண்டு வருவோம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.

எந்த கட்சியையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அந்த நிலை உருவாகவில்லை. உருவாகாது. அ.தி.மு.க. மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கட்சி. அதை எவராலும் கலைக்க முடியாது.

இவ்வாறு தம்பிதுரை கூறினார்.

‘டி.டி.வி.தினகரன் நடத்தும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பீர்களா?’ என்று கேட்டதற்கு, ‘நான் டெல்லி செல்கிறேன். இதனால் எந்த கூட்டத்திலும் பங்கேற்க மாட்டேன். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை எல்லோரும் கொண்டாடலாம்’ என்று தம்பிதுரை கூறினார்.

மேலும் செய்திகள்