ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற மக்களை ஒன்று திரட்டி போராட்டம் வைகோ பேட்டி

தமிழகத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவேன் என மாதிரிமங்கலத்தில் வைகோ கூறினார்.

Update: 2017-08-13 23:15 GMT
திருவாலங்காடு,

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ளது மாதிரிமங்கலம் கிராமம். இங்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளாக கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இந்த பகுதியில் 2 கச்சா எண்ணெய் கிணறுகள் உள்ளன. இதே பகுதியில் உள்ள குத்தாலம் பாசன வாய்க்காலின் கீழே கச்சா எண்ணெய் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் 3 முறை உடைப்பு ஏற்பட்டு சரிசெய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது அதே குழாயில் 4-வது முறையாக உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கசிந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று மாதிரிமங்கலத்துக்கு வந்து கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டார். அப்போது அவர் குழாயில் இருந்து கசிந்த கச்சா எண்ணெய்யை முகர்ந்து பார்த்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் இன்னும் 110 இடங்களில் எண்ணெய் எடுப்போம் என்கிறார்கள். மீத்தேன், ஷேல் கியாஸ், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காக ஜெம் லெபாரட்டரி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்கு லைசன்ஸ் இருக்கிறது என கூறுகின்றனர். வடகிழக்கில் அருணாச்சலபிரசேதம், மணிப்பூர், நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியை பிடித்து விட்டோம், தமிழ்நாட்டிலும் அதற்கான வேலையை செய்துவிடலாம் என நரேந்திரமோடி எண்ணுகிறார். மாதிரிமங்கலத்தில் இப்போது 4-வது முறையாக கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை எண்ணெய் எடுத்து பல்லாயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளர்கள் இனிமேல் மக்கள் பிழைக்கட்டும்

கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்ட போகிறது. இனிமேல் மேட்டூரில் இருந்து தண்ணீர் வராது. காவிரி டெல்டா வானம் பார்த்த பூமியாகிவிட்டது. ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தை சிலர் தூண்டி விடுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். நான் தான் தூண்டி விடுகிறேன். இளைஞர்களை திரட்டுவேன். சம்பட்டி கொண்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எந்திரங்களை உடைப்பேன். கைது செய்தால் ஜாமீன் கேட்க மாட்டேன். மக்கள் போராடுவார்கள். காவிரி டெல்டா மக்களுக்கு ஆபத்து வரப்போகிறது. அது தடுக்கப்பட வேண்டும். ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எந்த இடத்திலும் ஆய்வு பணி செய்யக்கூடாது. மக்களின் இத்தனை போராட்டங்களுக்கு பிறகும் மத்திய மந்திரி தர்மேந்திரபிரதான் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவோம் என்கிறார்.

தமிழகம் வந்த மத்திய மந்திரி மகேஷ்சர்மா, ‘ஓ.என்.ஜி.சி. ஆய்வு குறித்து யாரும் பயப்பட வேண்டாம், மக்களுக்கு விளக்கம் சொல்கிறோம்’ என்கிறார். எங்களுக்கு விளக்கம் தேவையில்லை. இதனால் வரும் பாதிப்பு குறித்து புத்தகங்கள் மூலமாகவும், வெளிநாட்டில் ஏற்பட்ட பாதிப்புகள் மூலமாகவும் நன்கு அறிந்து வைத்திருக்கிறோம். ஓ.என்.ஜி.சி.யின் திட்டங்களால் நாட்டின் பொருளாதாரம் உயரும். ஆனால் தமிழகம் நாசமாகிவிடும். மாதிரிமங்கலத்தில் கச்சா எண்ணெய் கசிவு ஆவதை பஞ்சர் ஒட்டி சரிசெய்துவிடலாம் பிரச்சினை முடிந்துவிடும் என்று நினைக்காதீர்கள். இதற்காக தான் தஞ்சாவூரில் மாநாடு போடுகிறேன். இதன் மூலம் அடுத்த கட்ட போராட்டத்துக்கு மக்களை திரட்டுவேன்.

குட்கா ஊழல் குற்றசாட்டுக்கு ஆளான ராஜேந்திரன் தமிழகத்தின் டி.ஜி.பி. ஆக உள்ளார். போலீஸ் துறையில் கருப்பு ஆடுகளை களைய வேண்டும். நேர்மை தவறாத, நாணயம் தவறாத அதிகாரிகள் பலர் உள்ளனர். மக்களை காக்க, மண்ணை காக்க போராடியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வது தவறானது. எடப்பாடி பழனிசாமி அரசை குறை சொல்வதற்காகவோ, அரசை கவிழ்ப்பதற்காகவோ இதை கூறவில்லை. நடுநிலையோடு தான் பேசுகிறேன். ஜனநாயகத்துக்கு விரோதமாக நடந்தால் எதிர்ப்பேன். பேராசிரியர் ஜெயராமன், வளர்மதி, திருமுருகன் காந்தி ஆகியோர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும்.

ஓ.என்.ஜி.சி. ஆய்வுகளை முழுமையாக நிறுத்தினால் தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு துணிச்சல் இருந்தது. மீத்தேன் திட்டத்தை விரட்டி அடிப்போம் என்றாம். மாநில அரசு, மத்திய அரசுக்கு அடிபணிய கூடாது. ஆய்வு பணிகளை எதிர்ப்பை மீறி தொடர்ந்து நடத்தினால் தமிழகத்தில் இருந்து, ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை வெளியேற்ற மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவேன். வன்முறையில் ஈடுபடமாட்டோம். கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி கலெக்டர் உடனடியாக வந்து மக்களை சந்தித்து இருந்தால் கதிராமங்கலத்தில் பிரச்சினை ஏற்பட்டிருக்காது. மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யவில்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் சம்பந்தப்பட்ட நிறுவனம் திட்டத்தை நிறைவேற்றாத காரணத்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக வைகோ, மாதிரிமங்கலம் கிராம மக்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், ‘மக்களையும், மண்ணையும் காக்க அனைவரும் கட்சி பேதமின்றி ஒன்றிணைந்து போராடி ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை விரட்டி அடிப்போம்’ என கூறினார். பேட்டியின்போது மாநில விவசாய அணி செயலாளர் முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்