வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் அதற்கு காரணமான கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி திருவண்ணாமலையில் 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2017-08-13 23:00 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக திருவண்ணாமலை போளூர் ரோட்டில் உள்ள செட்டிகுளமேடு பகுதியில் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. அந்த பகுதியில் உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் கால்வாயில் மழை வெள்ளம் செல்ல முடியாமல் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் நேற்று காலை சுமார் 8 மணியளவில் செட்டிகுளமேடு ரேணுகாம்பாள் கோவில் அருகே வேலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கிரிவல நாட்களில் போலீசார் பயன்படுத்தும் சாலை தடுப்புகளை நடுரோட்டில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வருவாய்த்துறை அதிகாரிகள் வந்தால் தான் கலைந்து செல்வோம் என்று போலீசாரிடம் அவர்கள் கூறினார்.

இதையடுத்து திருவண்ணாமலை உதவி கலெக்டர் உமாமகேஸ்வரி, தாசில்தார் ரவி மற்றும் அலுவலர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உதவிகலெக்டர் உமாமகேஸ்வரி, “உடனடியாக கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரப்படும்” என்று கூறினார்.

பின்னர் அவரது உத்தரவின் பேரில் செட்டிகுள மேடு பகுதிக்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு கால்வாய்கள் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, தூர்வாரப்பட்டது. இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல் தாமரை நகர் பகுதியிலும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. அந்த பகுதி மக்களும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தேனிமலையில் உள்ள போக்குவரத்துக்கழக பணிமனை அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அங்கு நகராட்சி ஆணையர் பாரிஜாதம் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக உறுதி அளித்ததன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் நகராட்சி ஆணையர் பாரிஜாதம் தாமரை நகரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். 

மேலும் செய்திகள்