‘நீட்’ தேர்வில் தமிழகத்தை மத்திய அரசு ஏமாற்றுகிறது ம.நடராசன் பேட்டி

‘நீட்’ தேர்வில் தமிழகத்தை மத்திய அரசு ஏமாற்றுகிறது என்று ம.நடராசன் கூறினார்.

Update: 2017-08-13 23:15 GMT
தஞ்சாவூர்,

ஈழத்தில் முள்ளிவாய்க்காலில் நடந்த அவலங்களை இன்னும் 1,000 ஆண்டுகள் ஆனாலும் தெளிவாக காணும் வகையில் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிற்பங்கள் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நடக்கும் ஆட்சி களையப்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கருத்து சொல்லி இருப்பதற்கு இப்போது நான் பதில் சொல்ல விரும்பவில்லை. சொல்ல வேண்டிய நேரத்தில், சரியான விதத்தில் பதில் சொல்வேன்.

‘நீட்’ தேர்வில் தமிழக அரசை, மத்திய அரசு ஏமாற்றுகிறது. ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக தமிழக சட்டசபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்குகள் செலுத்தி உள்ளனர். அதற்கு நன்றி கடனாக ‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும்.

இந்தியாவில் பள்ளி, கல்லூரிகளில் அதிக அளவில் உள்கட்டமைப்பை உருவாக்கி இருப்பது தமிழ்நாடும், கர்நாடகமும் தான். இந்த இடத்தை வடக்கில் இருந்து வரும் மாணவர்களுக்கு கொடுப்பதால் நம்முடை உரிமை பறிபோகிறது. இதை எதிர்த்து அனைவரும் ஒன்று சேர்ந்து போராடாமல் தனித்தனியாக பேசுவதால் தான் மத்திய அரசு தாமதப்படுத்துகிறது.

காமராஜர் காலத்தில் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. எம்.ஜி.ஆர். காலத்தில் தனியார் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து படிப்பதற்காக மாணவர்கள் வெளிமாநிலங்களுக்கு செல்லக்கூடாது என்பதற்காக தான் இவ்வளவு பள்ளி, கல்லூரிகள் உருவாக்கப்பட்டன.

தமிழர்களின் உழைப்பால் உருவான அந்த இடங்களை ‘நீட்’ தேர்வு அடிப்படையில் வடமாநிலத்தினர் எடுத்து செல்வதை அனுமதிக்க முடியாது. இது தமிழர்களின் தன்மான பிரச்சினை. இதற்கு மத்திய அரசு முடிவு காண வேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நிகழும்.

மத்திய அரசு அதிகாரிகள் ஒரு மாநிலத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு மாற்றப்பட்டால் அவர்களது குழந்தைகள் தொடர்ந்து ஒரே கல்வியை படிக்க வேண்டும் என்பதற்காக சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது எல்லோரும் அந்த பாடத் திட்டத்தை படிக்க வேண்டும் என்பதற்காக தான் ‘நீட்’ தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை எதிர்த்து தமிழர்கள் இறுதிமூச்சு இருக்கும் வரை போராட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியதாவது:-

டி.டி.வி.தினகரன் சொன்னதை யாரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அவர் யாரையும் தனிப்பட்ட முறையில் மோசடிக்காரர்கள் என்று சொல்லவில்லை.

பொதுச்செயலாளர் சசிகலா, துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று 7 லட்சம் பிரமாண பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்போது தினகரனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். அர்த்தமற்று பேசுபவர்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. நாளை (இன்று) மேலூரில் நடக்கும் பொதுக்கூட்டம் அனைத்து பிரச்சினைகளுக்கும் விடை அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்