அதிராம்பட்டினத்தில் பலத்த மழை: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

அதிராம்பட்டினத்தில் பலத்த மழை காரணமாக குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது.

Update: 2017-08-13 23:00 GMT
அதிராம்பட்டினம்,

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதிய அளவு மழை பெய்யவில்லை. இதன் காரணமாக அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. 3 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் தரிசாக மாறி விட்டன. இப்பகுதியில் 4 ஆண்டுகளுக்கு முன்பு 100 அடியில் இருந்த நிலத்தடிநீர் தற்போது 350 அடிக்கு சென்றுவிட்டது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அதிராம்பட்டினம் பகுதியில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை அதிகாலை வரை கொட்டி தீர்த்தது.

இடைவிடாது பெய்த பலத்த மழை காரணமாக அதிராம்பட்டினம் காந்திநகர், கரையூர்தெரு, முத்தம்மாள்தெரு உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இப்பகுதி பொதுமக்கள் இரவு முழுவதும் விழித்திருந்து வீட்டுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அதிராம்பட்டினம் பகுதியில் நில மட்டத்தை விட உயரமாக அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் வடிகால்கள், வாய்க்கால்கள் பல நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளன. இதன் காரணமாக மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததாக அப்பகுதி பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுபற்றி அதிராம்பட்டினம் காந்திநகர் கிராம தலைவர் குணசேகரன் கூறியதாவது:- காந்திநகர் பகுதியில் உள்ள வாய்க்கால் நீண்ட நாட்களாக தூர்வாரப்படவில்லை. வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குப்பை மேடாக மாறி விட்டது. இதனால் மழை நீர் வடிவதற்கு வழி இல்லை. எனவே வாய்க்கால்களை முறையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்