திருச்செங்கோட்டில் கொலை முயற்சி, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேர் கைது
திருச்செங்கோட்டில் கொலை முயற்சி, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்செங்கோடு,
திருச்செங்கோடு பச்சியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த தனசேகரன், கார்த்தி ஆகிய 2 பேரும் கடந்த 5–ந்தேதி மோட்டார் சைக்கிளில் சென்றனர். சேலம் ரோடு கார்னர் அருகில் சென்ற போது முன்விரோதத்தில் ஒரு மர்ம கும்பல் அவர்களை வழிமறித்து கத்தி, அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டது. இதில் தனசேகரன், கார்த்தி ஆகிய 2 பேரும் லேசான காயம் அடைந்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில் திருச்செங்கோடு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது திருச்செங்கோடு அப்பூர்பாளையம் பகுதியை சேர்ந்த சுருட்டையன் என்கிற பிரபாகரன் (வயது32) தலைமையிலான கும்பல் தனசேகரன், கார்த்தி ஆகிய 2 பேரையும் வெட்டியது தெரியவந்தது. அவர்கள் 5 பேரையும் போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று தனசேகரன் மோட்டார் சைக்கிளில் திருச்செங்கோடு மலைசுத்தி ரோடு தண்ணீர் டேங்க் அருகே சென்றார். அப்போது பிரபாகரன் மற்றும் 4 பேர் கும்பல் காரில் வந்து தனசேகரனின் மோட்டார் சைக்கிள் மீது மோதி கீழே தள்ளி அரிவாளால் வெட்ட முயன்றனர்.
4 பேர் கைதுஇதில் தனசேகரனுக்கு கையில் லேசான அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னர் அவரிடம் இருந்து ரூ.1,260, செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்து கொண்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. கொலை முயற்சி, கொள்ளை சம்பவம் குறித்து திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி பிரபாகரன், மேட்டூர் பகுதியை சேர்ந்த கோபிநாத்(40), சேலம் கள்ளாங்குத்து தெருவை சேர்ந்த ஏழுமலை(27), புதுக்கோட்டை மாவட்டம் ஆவூடையார்கோவில் பகுதியை சேர்ந்த சிவா (26) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய வசந்தராஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தப்பி ஓடிய போது பிரபாகரனுக்கு காலில் முறிவு ஏற்பட்டதால் அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.