காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 220 பவுன் நகை, ரூ.6½ லட்சம் கொள்ளை

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 220 பவுன் நகை, ரூ.6½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

Update: 2017-08-13 22:15 GMT

செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பால்கனி (வயது 63). ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். திருக்கழுக்குன்றத்தில் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆனந்த ரூபி. நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் காரைக்கால் சென்றுவிட்டு நேற்று காலை வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 150 பவுன் நகை, ரூ.4½ லட்சம் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து பால்கனி திருக்கழுக்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். வரலட்சுமி விரதத்தின் போது வங்கி லாக்கரில் இருந்து எடுத்த நகையை வீட்டில் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் பகுதியில் ரெயில்வே தெருவில் வசித்து வருபவர் கன்னியப்பன். கல்வி துறையில் அரசு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் இரவு கன்னியப்பன் அவரது வீட்டின் முதல் மாடியில் குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தார்.

தரை தளத்தில் உள்ள வீடு பூட்டப்பட்டிருந்தது. நேற்று காலை கன்னியப்பன் எழுந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 70 பவுன் தங்கநகை மற்றும் ரூ.2 லட்சம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் மூதாட்டியை கொலை செய்து நகை திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்