விழுப்புரத்தில், நாளை சுதந்திர தின விழா கலெக்டர் சுப்பிரமணியன் தேசியக்கொடியை ஏற்றுகிறார்

விழுப்புரத்தில் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதில் கலெக்டர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார்.

Update: 2017-08-13 23:15 GMT

விழுப்புரம்,

சுதந்திர தின விழா நாளை(செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.

விழாவில் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் கலந்துகொண்டு, தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். அதனை தொடர்ந்து சுதந்திர தின போராட்ட தியாகிகளை கவுரவித்து அவர்களை சிறப்பிக்கிறார். பின்னர் ஏழை, எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

விழாவையொட்டி எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் 4 முனை சந்திப்பு, காந்தி சிலை, சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்பட நகரின் பல்வேறு இடங்களில் இரவு, பகலாக தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கியமான இடங்களில் ஏராளமான போலீசார் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம் வழியாக கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட வெளி மாநிலங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். பொதுமக்கள் அதிகளவில் கூடும் மார்க்கெட்டுகள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள் அனைத்திற்கும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் ரெயில் நிலையத்தில், ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வஜ்ரவேல், சப்–இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் ராஜன், ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், சப்–இன்ஸ்பெக்டர் அனில்சென், சுனில்குமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகள் கொண்டு வரும் உடைமைகள் கடும் சோதனை செய்யப்பட்ட பின்னரே ரெயில் நிலையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி ரெயில் நிலைய நுழைவு வாயில் அருகில் மெட்டல் டிடெக்டர் கருவியின் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் சிறப்பு மோப்பநாய் பிரிவு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், ஏட்டுகள் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் போலீஸ் மோப்ப நாய் ராக்கியின் உதவியுடனும் விழுப்புரம் புதிய பஸ்நிலையம், ரெயில் நிலைய பகுதி முழுவதும் தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள்.

இது தவிர ரெயில் நிலையத்திற்குள் வரும் அனைத்து ரெயில்களிலும் ஒவ்வொரு பெட்டியாக சென்று போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி ரெயில்வே தண்டவாளங்களையும் கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது.

விழாவையொட்டி விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள போலீஸ் மைதானத்தில் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அணிவகுப்பை ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு வெள்ளைசாமி, இன்ஸ்பெக்டர், விஜயரங்கன், சப்–இன்ஸ்பெக்டர்கள் தீபா, பிரபாவதி ஆகியோர் நடத்தினார்கள். இதேபோல் தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், இளம் செஞ்சிலுவை சங்கத்தினர், ஊர்காவல் படையினர், வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் ஆகியோரும் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்