எவ்வளவு கோடி ரூபாய் செலவானாலும் அத்திக்கடவு திட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

எவ்வளவு கோடி ரூபாய் செலவானாலும் அத்திக்கடவு திட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என்று பெருந்துறையில் நடந்த பொதுக்கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Update: 2017-08-14 02:00 GMT

பெருந்துறை,

அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக்கோரி பா.ம.க. சார்பில் வாகன பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வாகன பேரணி கோவை மாவட்டம் காரமடை பகுதியில் இருந்து நேற்று தொடங்கியது. ஊர்வலத்தில் பா.ம.க. இளைஞர் அணி மாநில தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். ஊர்வலம் அங்கிருந்து அன்னூர், அவினாசி வழியாக ஈரோடு மாவட்டம் நம்பியூரை சென்றடைந்தது. இதைத்தொடர்ந்து அத்திக்கடவு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுக்கூட்டம் பெருந்துறையில் நடந்தது.

கூட்டத்துக்கு கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

அத்திக்கடவு திட்டம் என்பது கடந்த 1962–ம் ஆண்டு காமராஜர் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டம் ஆகும். அப்போது இந்த திட்டத்துக்கு மேல் பவானி திட்டம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அத்திக்கடவு திட்டம் என்பது உபரிநீரை சேமிக்கும் திட்டம் ஆகும். பவானி ஆற்றில் செல்லும் நீர்

கடந்த சட்டசபை தேர்தலின் போது கொங்கு மண்டலத்தை சேர்ந்த விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியதின் விளைவாக மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா இந்த திட்டத்தை நிறைவேற்றுவதாக அறிவித்தார்.

தமிழக ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட திராவிட கட்சிகள் தவறியதால் ஆண்டு ஒன்றுக்கு ஏராளமான டி.எம்.சி. தண்ணீர் வீணாக சென்று கடலில் கலக்கிறது. பவானி ஆற்றில் இருந்து மட்டும் 19 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த நீரை சேமிக்கும் வகையில் இந்த திட்டத்தை திராவிட கட்சிகள் முன்பே நிறைவேற்றி இருந்தால், இதற்காக விவசாயிகள் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இருக்காது.

காமராஜர் காலத்தில் இந்த திட்டத்தை நிறைவேற்ற ரூ.10 கோடி மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால் தற்போது ரூ.3 ஆயிரத்து 500 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. எவ்வளவு கோடி ரூபாய் செலவானாலும் அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றியே தீர வேண்டும்.

தற்போது இந்த திட்டம் ‘காலிங்கராயன்–காரமடை’ திட்டம் என்கிற புதிய பெயரை பெற்று உள்ளது. இது பின்னோக்கி அமைக்கப்படும் திட்டமாக மாறிவிட்டது. அதாவது குழாய்கள் மூலம் கொண்டும் செல்லும் திட்டமாக, அதுவும் காலிங்கராயன் அணைப்பகுதியில் இருந்து கோவை மாவட்டம் காரமடை வரை கொண்டு செல்லும் திட்டமாக மாற்றப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் 33 ஆறுகள் ஓடுகின்றன. இவற்றின் குறுக்கே ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை வீதம் கட்டினாலே தமிழக தண்ணீர் பிரச்சினை தீர்ந்து விடும். இந்த திட்டங்களை நிறைவேற்ற ரூ.40 ஆயிரம் கோடி போதும். விவசாயிகள் வாழ்வு மலர்ச்சி அடையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக நம்பியூரிலும் அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக்கோரி நடந்த கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

மேலும் செய்திகள்