4 நாட்கள் தொடர் விடுமுறை: கன்னியாகுமரி, திற்பரப்பில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது

4 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரி, திற்பரப்பு போன்ற சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியது.;

Update: 2017-08-13 23:00 GMT
கன்னியாகுமரி,

சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்களையொட்டி இன்று (திங்கட்கிழமை) கிருஷ்ணஜெயந்தி, நாளை (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தினவிழா என தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை ஆகும். இதை தொடர்ந்து சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் நேற்று முன்தினம் முதலே சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோத தொடங்கியது. பஸ், வேன், கார்கள் போன்ற வாகனங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர். அவர்கள் கடலில் குளித்து மகிழ்ந்தனர். மேலும், விவேகானந்தர் மண்டபம், காந்தி மண்டபம், காட்சி கோபுரம் போன்ற இடங்களை பார்த்து ரசித்தனர்.

இதுபோல், நேற்று காலையிலும் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. இவர்கள் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல படகுதுறையில் நீண்ட வரிசையில் காத்து நின்று படகேறி சென்று பார்வையிட்டனர். இதுபோல், பகவதி அம்மன் கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை தரிசித்தனர். சுற்றுலாபயணிகளின் வாகனங்கள் அணிவகுத்து வந்ததால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

குமரி மாவட்டத்தில் வளர்ந்து வரும் சுற்றுலா தலங்களில் திற்பரப்பு அருவியும் ஒன்று. இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அருவியில் தற்போது குறைந்த அளவு தண்ணீரே விழுகிறது. அதையும் பொருட்படுத்தாமல் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு வந்து குளித்து மகிழ்ந்தனர்.

இதுபோல், வட்டக்கோட்டை, சொத்தவிளை கடற்கரை, பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிபாலம் போன்ற இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

மேலும் செய்திகள்