வங்கிகளில் கொள்ளையடிக்க முயன்றது வடமாநில கும்பலா? கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை

கொட்டாரம், அழகப்பபுரம் வங்கிகளில் கொள்ளையடிக்க முயன்றது வடமாநிலத்தை சேர்ந்த கும்பலாக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதுதொடர்பாக வங்கிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2017-08-13 22:15 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரத்தில் ஒரு வங்கியில் கடந்த 10–ந் தேதி பணிகள் முடிந்த பின்பு அதிகாரிகளும், ஊழியர்களும் வங்கியை பூட்டிவிட்டு சென்றனர். மறுநாள் காலையில் வங்கியை திறக்க சென்ற போது கொள்ளை முயற்சி நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். யாரோ மர்ம நபர்கள் வங்கிக்குள் புகுந்து அலாரம், கண்காணிப்பு கேமரா மின் இணைப்புகளை துண்டித்துவிட்டு லாக்கரை உடைக்க முயன்றுள்ளனர். ஆனால், அதை உடைக்க முடியாததால் திரும்பி சென்றுள்ளனர். இதனால், அதில் இருந்த ரூ.50 லட்சம், 10 கிலோ தங்க நகைகள் தப்பின.

இதுகுறித்து வங்கி மேலாளர் கன்னியாகுமரி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

முகமூடி நபர்கள்

மேலும், வங்கியில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி ஆய்வு நடத்தினர். அப்போது, கேமராவின் மின் இணைப்பை துண்டிக்கும் முன்பு முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் வங்கிக்குள் அங்குமிங்கும் நடமாடிய காட்சி பதிவாகி இருந்தது. அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் போன்று காட்சியளித்தனர். இதையடுத்து அந்த நபர்களை பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அழகப்பபுரம் வங்கி

அதே நாளில் அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரம் மெயின்ரோடு பகுதியில் செயல்படும் வங்கியிலும் 2 நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அங்கு கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்த போது, முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இந்த இரண்டு வங்கியிலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது ஒரே கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக கொள்ளையர்களை பிடிக்க கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்