காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இளையான்குடி ராணுவ வீரர் பலி
காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இளையான்குடியை சேர்ந்த எல்லைப்பாதுகாப்பு படை வீரர் இறந்துபோனார்.
இளையான்குடி,
காஷ்மீர் மாநிலம் சைனபோரா பகுதியில் உள்ள அவ்னீரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் எல்லைப் பாதுகாப்பு படையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர்.
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 7 பேர் படுகாயமடைந்தனர். உடனே அவர்கள் ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 வீரர்கள் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்கள்.
தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்துபோனவர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த இளையராஜா(வயது 26). இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கண்டனி கிராமம்.
வீரமரணம் அடைந்த இளையராஜாவின் தந்தை பெரியசாமி, தாய் மீனாட்சி. இளையராஜா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எல்லைப் பாதுகாப்பு படையில் பணியில் சேர்ந்தார். இவருக்கு கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர் செல்வி(23). இவர் தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் இளையராஜா தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறையில் வந்து விட்டுச்சென்றார்.
இளையராஜாவின் உடல் விமானம் மூலம் நாளை கொண்டுவரப்படுகிறது. பின்னர் அவரது சொந்த ஊரான கண்டனி கிராமத்தில் பொதுமக்கள் மரியாதை செலுத்துவதற்காக உடல் வைக்கப்படும். பின்னர் ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
இளையராஜாவின் சொந்த ஊரான கண்டனியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வந்தன.
இந்தநிலையில் இளையராஜா இறந்த செய்தி அறிந்த அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. ஊர்மக்கள் அனைவரும் இளையராஜாவின் வீட்டின் முன்பு குவிந்தனர்.