அப்துல் கலாம் நினைவிடம்,அரிச்சல் முனையில் கூடுதல் பாதுகாப்பு
அப்துல் கலாம் நினைவிடம்,அரிச்சல் முனையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஸ்மீனா தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பேய்க்கரும்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அப்துல்கலாமின் நினைவிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்ததையொட்டி மணிமுத்தாறு பகுதியில் இருந்து ஒரு கம்பெனி பட்டாலியன் படைபிரிவினர் பாதுகாப்பிற்காக வரவழைக்கப்பட்டனர். இவர்கள் தற்போது வரை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பகலில் 40 பேரும், இரவு நேரத்தில் 20 பேரும் என சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுஉள்ளனர். இதுதவிர, மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பிலும் 40 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அப்துல்கலாமின் நினைவிடத்தில் தற்போது மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் சார்பில் முழுபரிசோதனை கருவியும், மெட்டல் டிடெக்டர் கருவியும் அமைக்கப்பட்டு சோதனையிடப்பட்டு வருகிறது.
இந்த பணிக்காக மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பிடம் தலா 2 முழுபரிசோதனை கருவியும், மெட்டல் டிடெக்டர் கருவியும் கேட்கப்பட்டுஉள்ளது. பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ள தனுஷ்கோடி சாலையை பார்க்கவும், கடல் அழகை ரசிக்கவும் ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக அப்துல்கலாமின் நினைவிடத்திற்கும், தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கும் நாள் ஒன்றுக்கு 8,000 பேர் வரையிலான பொதுமக்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தலா 15,000 வரையிலான பொதுமக்களும் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.
அரிச்சல்முனை பகுதியில் கடல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாலும், அலை அதிகம் இருப்பதாலும் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் சார்பில் 5 பேரும், கடலோர பாதுகாப்பு குழுமத்தின் சார்பில் 5 பேரும் என பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுஉள்ளனர். பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்குமுன் கடல் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டவரின் உடல் இதுவரை மீட்கப்படவில்லை.
இதுபோன்ற பாதுகாப்பற்ற நிலை உள்ளதாலும், அப்துல்கலாமின் நினைவிட பாதுகாப்பிற்காகவும் கூடுதல் போலீசார் ஒதுக்கீடு கேட்கப்பட்டுஉள்ளது. அரிச்சல்முனை பகுதியில் பார்க்கிங் வசதி இல்லாததால் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க அங்கு செல்லும் தனியார் வாகனங்களை தனுஷ்கோடி சோதனை சாவடி அல்லது முகுந்தராயர் சத்திரம் பகுதியில் நிறுத்தி விட்டு அங்கிருந்து அரிச்சல்முனைக்கு அரசு பஸ்கள் மட்டும் சென்று திரும்ப பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், கடல் ஆமைகள் முட்டையிடும் கடற்கரை பகுதி என்பதால் இந்த புதிய சாலையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பேட்டரி கார் இயக்க சுற்றுலாத்துறைக்கு பரிந்துரை செய்யப்படும். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா தெரிவித்தார்.