என்ஜினீயரிங் படிப்பிற்கான முதல் கட்ட கலந்தாய்வு: அரசு கல்லூரிகளில் 53 இடங்கள் காலியாக உள்ளன
புதுவையில் என்ஜினீயரிங் படிப்பிற்கான முதல் கட்ட சென்டாக் கலந்தாய்வு நேற்று முடிவடைந்தது. இதன் முடிவில் அரசு கல்லூரிகளில் மொத்தம் 53 இடங்கள் காலியாக உள்ளன.
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் உள்ள 2 அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் 15 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்கள் சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த கலந்தாய்வு கடந்த 8–ந் தேதி தொடங்கி நேற்று மாலை முடிவடைந்தது. இதில் கலந்துகொள்ள மொத்தம் 4 ஆயிரத்து 359 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் 2 ஆயிரத்து 197 பேர் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளையும், விருப்பமான பாடப்பிரிவுகளையும் தேர்வு செய்தனர். அவர்களுக்கு சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு மற்றும் அதிகாரிகள் சேர்க்கை ஆணைகளை வழங்கினர்.
53 இடங்கள்
முதல் கட்ட கலந்தாய்வு முடிவில் காலியாக உள்ள இடங்களின் விவரம் வருமாறு:–
முதல் கட்ட கலந்தாய்வின் முடிவில் புதுவை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் பிரிவில் 3, எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ருமெண்டேஷன் பிரிவில் 4, கம்ப்யூட்டர் சயின்ஸ் 2, கெமிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் 3, மெக்கானிக்கல் என்ஜினீயரிங் 1, சிவில் என்ஜினீயரிங் பிரிவில் 3 என மொத்தம் 16 இடங்கள் காலியாக உள்ளன.
காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் என்ஜினீயரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 11, தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.) 17, எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் 9 என 37 இடங்கள் காலியாக உள்ளன. அரசு பொறியியல் கல்லூரிகளில் முதல் கட்ட கலந்தாய்வின் முடிவில் மொத்தம் 53 இடங்கள் காலியாக உள்ளன. 15 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஆயிரத்து 946 இடங்கள் காலியாக உள்ளன.
18–ந் தேதிக்குள்...முதல் கட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டு கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள் வருகிற 18–ந் தேதி மாலை 5 மணிக்குள் அந்த கல்லூரிகளின் சேர வேண்டும். அதன் பின்னர் காலியாக உள்ள இடங்களுக்கு 2–வது கட்ட கலந்தாய்வு நடத்தப்படும்.
மேற்கண்ட தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு தெரிவித்துள்ளார்.