என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை: அரசு ஊழியர் தம்பதி வருமானவரி துறை பிடியில் சிக்கினர்

என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவருக்கு நெருக்கடி கொடுத்த அரசு ஊழியர் தம்பதி வருமானவரி துறை பிடியில் சிக்கி உள்ளனர்.

Update: 2017-08-12 23:12 GMT

 

புதுச்சேரி,

புதுவை மேட்டுப்பாளையம் தர்மாபுரியை சேர்ந்தவர் தயாளன்(வயது 47). என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர். கடந்த சட்டமன்ற தேர்தலில் காமராஜ் நகர் தொகுதியில் வைத்திலிங்கத்தை எதிர்த்து போட்டியிட்டார். அப்போது தேர்தல் செலவுக்காக அவர் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. அந்த தொகையை அவரால் திருப்பி செலுத்த முடியாததால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் தயாளன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வருமான வரித்துறை பிடியில் சிக்கினர்

விசாரணையில் தயாளனுக்கு ரெட்டியார்பாளையம் காவேரி நகர் முதல் குறுக்குத்தெருவைச் சேர்ந்த இளங்கோவன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பல லட்சம் ரூபாய் கடன் கொடுத்து இருந்ததாக தெரிகிறது. அந்த தொகையை திருப்பி கேட்டு தயாளனுக்கு அவர்கள் நெருக்கடி கொடுத்து வந்ததும் அம்பலமானது. இளங்கோவன் காவல்துறை தலைமை அலுவலகத்திலும், அவரது மனைவி அரசு ஊழியராகவும் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் இருவரையும் மேட்டுப்பாளையம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்தநிலையில் இளங்கோவனும் அவரது மனைவியும் வருமான வரித்துறை பிடியில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு இவ்வளவு பணம் எங்கு இருந்து வந்தது. அந்த பணத்திற்கு அவர்கள் முறையாக வரி செலுத்தி உள்ளனரா? என்பது குறித்து விசாரிக்க வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். இதனால் இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது.

மேலும் செய்திகள்