ஆரணி பகுதியை சேர்ந்த எல்லைபாதுகாப்பு படைவீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

ஆரணி பகுதியை சேர்ந்த எல்லைபாதுகாப்பு படைவீரர் திரிபுரா மாநிலத்தில் பணியாற்றியபோது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

Update: 2017-08-12 23:06 GMT

ஆரணி,

ஆரணி பகுதியை சேர்ந்த எல்லைபாதுகாப்பு படைவீரர் திரிபுரா மாநிலத்தில் பணியாற்றியபோது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரது சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் கூறினர்.

ஆரணியை அடுத்த களம்பூர் அருகே உள்ள இலுப்பகுணம் காலனி பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். முன்னாள் ராணுவ வீரர். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 42) திரிபுரா மாநிலத்தில் எல்லைபாதுகாப்பு படைவீரராக கடந்த 9 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், ஜான்கீர்த்தி (3) என்ற மகனும் உள்ளனர். கடந்த 2 மாதத்திற்கு முன்பு கார்த்திகேயன் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். இங்கு விடுமுறையை கழித்து விட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு பணிக்கு திரும்புவதாக கூறிச்சென்றார்.

இந்த நிலையில் கடந்த 10–ந் தேதி இரவு அவர் இறந்து விட்டதாக எல்லைபாதுகாப்பு படை அலுவலகத்திலிருந்து குடும்பத்தினருக்கு போன் மூலம் தகவல் வந்தது. இதனை கேட்டு மனைவி ஜெயந்தி மற்றும் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். சற்று நேரத்தில் அவர் மன அழுத்தம் காரணமாக துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்தது. இதனால் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

அவரது உடல் அங்கிருந்து ஆரணிக்கு 12–ந் தேதி (நேற்று) கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று மாலை 5 மணி வரை அவரது உடல் வரவில்லை. இந்த நிலையில் கார்த்திகேயனின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவரது பெற்றோர் கூறியதாவது:–

எங்களது மகன் மனஅழுத்தத்தால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக எல்லைபாதுகாப்பு படை அதிகாரிகள் போனில் தெரிவித்தனர். கடந்த 2 மாதத்திற்கு முன்பு அவர் விடுமுறையில் வந்தபோது அனைவரிடமும் சகஜமாக பேசினார். சேத்துப்பட்டு அருகே நரசிங்கபுரத்தில் உள்ள மாமியாரின் வீட்டிற்கும் சென்று வந்ததோடு நண்பர்களையும் சந்தித்து பேசினார்.

மனஅழுத்தம் ஏற்பட்டிருந்தால் அவர் சகஜமாக பேசியிருக்க மாட்டார். அவர் பணிக்கு திரும்பியபோது உடல் நலம் பாதிக்கப்பட்டதாக எங்களுக்கு தெரிவித்தார். அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின் 10–ந் தேதி மதியம் 2 மணிக்கு போன் மூலம் எங்களிடம் பேசினார். ஆனால் இரவு 9 மணியளவில் எல்லைபாதுகாப்பு படை அதிகாரிகள் போன் செய்து கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

2–வது முறை போன் செய்து உங்கள் மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் 3–வது முறை பேசியபோது பணிச்சுமை காரணமாக மனஅழுத்தத்தில் இருந்த கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறினர். அதன்பிறகு அதிகாரிகள் இதுவரை எங்களை தொடர்பு கொள்ளவில்லை. ஆனால் கார்த்திகேயன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழையில்லை.

எங்கள் மகன் இறப்பில் அதிகாரிகள் முன்னுக்கு பின் முரணான தகவலை கூறியது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் எல்லைபாதுகாப்பு படையில் சேர வேண்டும் என்ற ஆர்வத்தில் பணியை விரும்பி ஏற்றுக்கொண்டார். அப்படியிருக்கும்போது பணிச்சுமையால் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறுவது நம்பும்படியாக இல்லை.

எனவே உரிய விசாரணை நடத்தி அவரது இறப்புக்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். இந்த வி‌ஷயத்தில் மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் அவரது உடலை மீட்டு வர எந்த உதவியும் செய்யவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்