டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சேத்தியாத்தோப்பில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Update: 2017-08-12 22:55 GMT

சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையில் மது வாங்கி குடிப்பவர்கள் பலரும் சாலையில் நடந்து செல்லும் மக்களிடம் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காலி மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கிளாஸ்கள் ஆகியவற்றை அங்குள்ள விவசாய நிலங்களில் வீசி செல்கின்றனர். இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதை தவிர்க்க புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் என்று கூறி அப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

 இதையடுத்து புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சேத்தியாத்தோப்பு பால்பண்ணை அருகே விவசாயிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பாலகுரு தலைமை தாங்கினார். விவசாய சங்க செயலாளர் ஆதிமூலம், பிச்சைப்பிள்ளை, ஜெய்சங்கர், ஜெயகுமார், தங்கமணி, கோபால் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

 இது பற்றி தகவல் அறிந்த சிதம்பரம் கோட்ட கலால் அலுவலர் விஜயா, சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்சந்தோஷ்முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடையை அகற்றுவது தொடர்பாக புவனகிரி தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடத்தி தீர்வு காணலாம் என கோட்ட கலால் அலுவலர் விஜயா தெரிவித்தார். அதை ஏற்று விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்