கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால் சுதந்திர தினத்தன்று வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும்

நாளைக்குள், கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால் சுதந்திர தினத்தன்று வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும் அதிகாரிகள் நடத்திய சமாதான கூட்டத்தில் அறிவிப்பு;

Update: 2017-08-12 23:00 GMT

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அடுத்த கொள்ளிடம் ஆற்றில் ம.ஆதனூர்– குமாரமங்கலம் இடையே ரூ.400 கோடி செலவில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டப்படும் என முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். இதையடுத்து தடுப்பணை கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு பூமி பூஜை நடந்தது. ஆனால் இதுவரை எந்தவொரு பணிகளும் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் உடனடியாக தடுப்பணை கட்டுமான பணியை தொடங்க வேண்டும். இல்லையெனில் சுதந்திர தினத்தன்று வருகிற 15–ந்தேதி கொள்ளிடக்கரை கிராமங்களில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.

இதையடுத்து நேற்று தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ஜெயந்தி தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மணவாளன், சக்திவேல், செந்தில்குமார், மதியழகன், பாலு, இளந்தமிழன், வக்கீல் ராதாகிருஷ்ணன் மற்றும் விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தாசில்தார் ஜெயந்தி, கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டுவது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், நாளைக்குள் (திங்கட்கிழமை) கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியை தொடங்காவிட்டால் ஏற்கனவே அறிவித்தபடி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று என்று தெரிவித்துவிட்டு கூட்டத்தில் இருந்து வெளியேறினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்