அமித்ஷாவின் சுற்றுப்பயணத்தால் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவால் வெற்றி பெற முடியாது

கர்நாடகத்தில் அமித்ஷாவின் சுற்றுப்பயணத்தால் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவால் வெற்றி பெற முடியாது என்று முதல்–மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Update: 2017-08-12 22:27 GMT

பெங்களூரு,

பல்லாரியில் நேற்று முதல்–மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா 3 நாட்கள் சுற்றுப்பயணமாக கர்நாடகம் வந்துள்ளார். பா.ஜனதா கட்சியை பலப்படுத்த போவதாகவும், சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதாகவும் சொல்கிறார்கள். அமித்ஷாவின் சுற்றுப்பயணத்தால் கர்நாடக பா.ஜனதா கட்சியில் எந்த மாற்றமும் நடக்க போவதில்லை. அமித்ஷா வருகையால் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து விடலாம் என்று பா.ஜனதாவினர் கருதுகிறார்கள். கர்நாடக மக்கள் காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளனர். அதனால் அமித்ஷா வந்தாலும் சரி, பிரதமர் மோடி வந்தாலும் சரி கர்நாடகத்தில் பா.ஜனதாவால் வெற்றி பெற முடியாது.

500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவித்ததால் மக்கள் பெரும் சிரமத்தை அனுபவித்தார்கள். அதனால் பா.ஜனதா ஆட்சி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று மோடி கூறினார். இதுவரை 4 லட்சம் பேர் மட்டுமே வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். தேர்தலுக்கு முன்பாக பா.ஜனதா கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது.

மந்திரிசபையில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவது தொடர்பாக விரைவில் டெல்லி செல்ல இருக்கிறேன். சில காரணங்களால் டெல்லி செல்ல முடியாமல் இருந்தேன். தற்போது அதற்கான நேரம் கிடைத்திருப்பதால், டெல்லி சென்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பேச உள்ளேன். அவர்களது அனுமதி கிடைத்ததும் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும். கர்நாடகத்தில் இந்த ஆண்டும் போதிய அளவு மழை பெய்யவில்லை. அதனால் இந்த மாத இறுதியில் செயற்கை மழை பெய்ய வைப்பது உறுதி.

மாநிலம் முழுவதும் ஏரிகளில் தண்ணீர் நிரப்பும் திட்டம் மும்முரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. உத்தரபிரதேசத்தில் 60–க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிர் இழந்துள்ளனர். அங்கு பா.ஜனதா தான் ஆட்சியில் இருக்கிறது. குழந்தைகள் உயிர் இழப்பு குறித்து முதலில் பா.ஜனதாவினர் பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.

மேலும் செய்திகள்