வீடுதோறும் வரி வசூல் செய்தனர்: சாலையை விரிவாக்கம் செய்யும் மலைகிராமமக்கள்
ஏற்காட்டில் மலைகிராமமக்கள் வீடுதோறும் வரி வசூல் செய்து தாங்களாகவே சாலையை விரிவாக்கம் செய்து வருகின்றனர்.
ஏற்காடு,
‘ஏழைகளின் ஊட்டி‘ என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தலைச்சோலை மலைகிராமம். இந்த கிராமத்தில் 300 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் 4 அடி சாலை செல்கிறது.
இந்த கிராமத்தில் பிரசித்திபெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமியில் சிறப்பு பூஜை நடத்தப்படும். மேலும், கார்த்திகை தீபத்திருவிழாவின்போது திருவண்ணாமலையில் தீபம் ஏற்றுவதுபோல் ஏற்காட்டிலும் இந்த கோவிலில் அதே நேரத்தில் தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இதை தரிசிக்க ஏற்காடு மட்டுமின்றி சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். அந்த சமயத்தில் இந்த குறுகலான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
விரிவாக்கப்பணி தொடங்கியதுஎனவே, இந்த சாலையை விரிவாக்கம் செய்யக்கோரி அதிகாரிகளிடம் மலைகிராமமக்கள் மனு கொடுத்தனர். இது தொடர்பாக அந்த பகுதி எஸ்டேட் உரிமையாளர்களிடம் நடந்த பேச்சுவார்த்தையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்துக்கு 5 அடி நிலத்தை சாலை விரிவாக்கத்துக்கு வழங்க ஒப்புக்கொண்டனர். ஆனால், சாலை விரிவாக்கப்பணி நடக்கவில்லை.
இதையடுத்து ஊர் கூட்டத்தை கூட்டி சாலை விரிவாக்க பணியை தாங்களாகவே மேற்கொள்வது என முடிவு செய்தனர். அதன்படி, கிராமமக்கள் வீட்டுக்கு ரூ.2 ஆயிரம் வரி வசூல் செய்து, மீதி பணத்தை அப்பகுதியை சேர்ந்த வசதி படைத்தவர்களிடம் நன்கொடையாக பெற்றனர். இதைத்தொடர்ந்து அந்த சாலையை விரிவாக்கம் செய்யும் பணியை தொடங்கி மேற்கொண்டு வருகிறார்கள்.
பணியை விரைந்து முடிப்போம்இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், ‘‘சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு விரிவாக்கம் செய்யப்படும் இந்த சாலையை அமைக்க இதுவரை ரூ.5 லட்சம் செலவாகி உள்ளது. மேலும் பணம் தேவைப்பட்டால் ஊர் மக்களிடம் அதிக வரி வசூலித்து சாலை வேலையை விரைந்து முடிப்போம்‘‘ என்று தெரிவித்தனர்.