ஏற்காட்டுக்கு சுற்றுலா சென்ற சேலம் தொழிலாளி விபத்தில் சாவு மனைவி கண் முன்னே பரிதாபம்
சேலம் ரெட்டியூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் கோபி (வயது 38), வெள்ளிப்பட்டறை தொழிலாளி. இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு ஜனனி என்ற மகளும், இளையராஜா என்ற மகனும் உள்ளனர்.
ஏற்காடு,
இந்த நிலையில் கோபியின் உறவினர்கள் 15 பேர் ஒரு வேனில் நேற்று ஏற்காட்டுக்கு சுற்றுலா சென்றனர். அவர்களுடன் கோபி, அவரது மனைவி பரமேஸ்வரி ஆகியோர் மட்டும் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றார்கள். ஜனனி, இளையராஜா ஆகியோர் உறவினர்களுடன் வேனில் பயணம் செய்தனர். ஏற்காடு சென்ற அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தார்கள்.
கீழே விழுந்து சாவு
இதையடுத்து மாலை 4.30 மணிக்கு அவர்கள் ஏற்காட்டில் இருந்து சேர்வராயன் மலைக்கோவிலுக்கு சென்றார்கள். சிறிது நேரம் கழித்து அங்கிருந்து அவர்கள் ஏற்காடு நோக்கி புறப்பட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து கோபி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடன் சென்ற மனைவி பரமேஸ்வரி லேசான காயம் அடைந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கோபியை மீட்டு சிகிச்சைக்காக ஏற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மனைவி கண் முன்னே கோபி உயிரிழந்த சம்பவம் சுற்றுலா சென்ற உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது.