மதுரைக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றபோது சிறுத்தையின் உடல் பாகங்களுடன் காவலாளி கைது

மதுரைக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றபோது, சிறுத்தையின் உடல் பாகங்களுடன் காவலாளி கைது செய்யப்பட்டார்.;

Update: 2017-08-13 00:30 GMT

கடமலைக்குண்டு,

கடமலைக்குண்டு அருகே உள்ள கோம்பைத்தொழு கிராமத்தை சேர்ந்தவர் சசிக்குமார் (38). இவர், அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவர், சிறுத்தையின் மண்டை ஓடு, நகம், முதுகுதண்டு, எலும்புகள் மற்றும் சிறிய அளவிலான யானை தந்தம் ஆகியவற்றை ஒரு பையில் எடுத்து கொண்டு விற்பனை செய்வதற்காக மதுரைக்கு சென்றிருந்தார்.

இதுகுறித்து கண்டமனூர் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக அவர்கள், மதுரை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் வைத்து சசிக்குமாரை வனத்துறையினர் மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து சிறுத்தையின் உடல் பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பிடிபட்ட சசிக்குமார், கண்டமனூர் வனச்சரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், கடமலைக்குண்டு அருகே அரண்மனைப்புதூர் கிராமத்தை சேர்ந்த ஜீவா, மண்ணூத்து கிராமத்தை சேர்ந்த பூமிநாதன் ஆகியோரிடம் இருந்து சிறுத்தையின் உடல் பாகங்கள் மற்றும் யானை தந்தம் வாங்கியதாக அவர் தெரிவித்தார்.

அதன்பேரில் 3 பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். சசிக்குமாரை வனத்துறையினர் கைது செய்தனர். உடல் பாகங்கள் சேதம் அடைந்த நிலையில் உள்ளதால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த சிறுத்தை இறந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட சிறுத்தையின் உடல் பாகங்களை கோர்ட்டு அனுமதி பெற்று, ஆய்வுக்காக அனுப்பி வைக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே அந்த சிறுத்தை வேட்டையாடி கொல்லப்பட்டதா?, எந்த பகுதியில் வேட்டையாடப்பட்டது? என்பது குறித்த விசாரணையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஜீவா, பூமிநாதன் ஆகியோரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்