மும்பை பல்கலைக்கழக துணை வேந்தருக்கு நோட்டீஸ்
தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதை அடுத்து மும்பை பல்கலைக்கழக துணை வேந்தருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மும்பை,
தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதை அடுத்து அதுகுறித்து விளக்கம்கேட்டு மும்பை பல்கலைக்கழக துணை வேந்தர் சஞ்சய் தேஷ்முக்கிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மும்பை பல்கலைக்கழக விதிகளின் படி செமஸ்டர் தேர்வு முடிந்து 45 நாட்களுக்குள் முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். ஆனால் கடந்த செமஸ்டர் தேர்வு முடிந்து 3 மாதங்கள் ஆன பிறகும் தேர்வு முடிவுகள் முழுமையாக வெளியிடப்படவில்லை. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பல்கலைக்கழக துணை வேந்தரை நீக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.இந்தநிலையில் மும்பை பல்கலைக்கழக வேந்தரும், மாநில கவர்னருமான வித்யாசாகர் ராவ் மும்பை பல்கலைக்கழகத்திற்கு செயல் துணை வேந்தரை நியமனம் செய்தார்.
இந்தநிலையில் தேர்வு முடிவுகள் தாமதமானது குறித்து விளக்கமளிக்க துணை வேந்தர் சஞ்சய் தேஷ்முக்கிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விதிகளின் படி தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படும்போது துணை வேந்தர் அதுகுறித்த காரணத்தை கவர்னர் மற்றும் மாநில அரசிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால் தற்போது வரை சஞ்சய் தேஷ்முக் தேர்வு முடிவு வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து கவர்னர், மாநில அரசிடம் விளக்கம் அளிக்கவில்லை. எனவே அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.துணை வேந்தர் அளிக்கும் பதில் திருப்தி அளிக்கவில்லையென்றால் அவரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் கவர்னர் வித்யாசாகர் ராவிற்கு உள்ளது. 150 ஆண்டுகள் பழமையான மும்பை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.