டி.டி.வி. தினகரனை அமைச்சர்கள் குழுவால் நீக்க முடியாது கோதண்டபாணி எம்.எல்.ஏ. பேட்டி

டி.டி.வி. தினகரனை அமைச்சர்கள் குழுவால் நீக்க முடியாது என்று கோதண்டபாணி எம்.எல்.ஏ. பேட்டி அளித்தார்.

Update: 2017-08-13 00:30 GMT

மாமல்லபுரம்,

அ.தி.மு.க. (அம்மா) அணியை சேர்ந்த திருப்போரூர் எம்.எல்.ஏ. கோதண்டபாணி, கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை தஞ்சாவூரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தினகரனின் மாமியாரின் 16–வது நாள் துக்க நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்த நிலையில் நேற்று மாமல்லபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் கோதண்டபாணி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

டி.டி.வி.தினகரனை நீக்கியதாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் குழு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. டி.டி.வி. தினகரனை அமைச்சர்கள் குழுவால் நீக்க முடியாது. ஒருவரை கட்சியில் இருந்து நீக்கவும், சேர்க்கவும் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கே அதிகாரம் உள்ளது.

துணை பொதுச்செயலாளருக்கே...

தற்போது கட்சியை வழி நடத்துகிற வகையில் பொதுச்செயலாளர் சசிகலா, துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன், அவைத்தலைவராக செங்கோட்டையன், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன், மாநில மீனவரணி செயலாளராக ஜெயகுமார் ஆகியோருக்கு பொறுப்புகளை அறிவித்து சென்றார். பொதுச்செயலாளருக்கு அடுத்தபடியாக கட்சி சம்பந்தமாக நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக துணை பொதுச்செயலாளருக்கே அதிகாரம் உள்ளது. ஆட்சியும், கட்சியும் உடலும், உயிரும் போன்று இணைந்திருக்கக்கூடிய ஒன்றாகும்.

உடலும், உயிரும் நன்றாக இருந்தால்தான் சிறப்பாக உயிர் வாழ முடியும் என்ற கூற்றின் அடிப்படையில் அனைவரும் ஒன்றுமையுடன் இருந்தால்தான் கட்சியை காப்பாற்ற முடியும். எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு கொண்டு செல்ல முடியும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றதுபோல், வருகிற 2019 பாராளுமன்ற தேர்தலில் கட்சியை பலப்படுத்தும் வகையில் டி.டி.வி.தினகரன் மேற்கொள்ள உள்ள தமிழக சுற்றுப்பயணம் அ.தி.மு.க.வினரிடையே புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்