படித்தவர்கள் நிறைந்த குமரி மாவட்டத்தில்தான் விவாகரத்து வழக்குள் அதிகம் பதிவு செய்யப்படுகிறது

படித்தவர்கள் நிறைந்த குமரி மாவட்டத்தில் தான் விவாகரத்து வழக்குள் அதிகம் பதிவு செய்யப்படுகிறது என்று நீதிபதி ஜாண்.ஆர்.டி.சந்தோசம் பேசினார்.

Update: 2017-08-12 22:45 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் ஏ.ஆர்.கேம்ப் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நேற்று சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமுக்கு, பள்ளி தாளாளர் தாமஸ் பவ்வத்து பரம்பில் தலைமை தாங்கினார். வக்கீல் ஜெஸ்டின்ராஜ், பெற்றோர்– ஆசிரியர் கழக தலைவர் சேகர் சந்திரபோஸ் ஆகியோர் முன்னிலைவகித்தனர். முகாமில், மகிளா கோர்ட்டு நீதிபதி ஜாண்.ஆர்.டி.சந்தோசம், சுவாமி பத்மேந்திரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

நிகர்ச்சியில், நீதிபதி.ஜாண்.ஆர்.டி.சந்தோசம் பேசியதாவது:–


 சுதந்திர நாட்டில் நமக்கான கடமைகளும், பொறுப்புகளும் நிறைய உள்ளது. அவை, சுய பொறுப்புணர்வு, சமூக பொறுப்புணர்வு, நாட்டு மீதான பொறுப்புணர்வு என்பதாகும்.

தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 42 நூலகங்கள் தான் உள்ளது. ஆனால் அதைவிட அதிகமாக எண்ணிக்கையில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மதுவினால் மட்டுமே 3 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், மதுவினால் சமூகத்தில் ஏற்படும் குற்றங்களில் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது.

மேலும், 10, 11, 12–ம் வகுப்பு பயிலும் மாணவ–மாணவிகளுக்கு இது ஒரு முக்கிய காலகாட்டமாகும். அவர்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் ஏராளமான வி‌ஷயங்கள் நடக்கலாம். ஆனால் அவர்களின் கவனம் படிப்பில் மட்டுமே இருக்கவேண்டும். ஸ்மார்ட்போன் தேவை என்பது தற்போது அத்தியவசியமாகி விட்டது. அதன்மூலம் நல்ல வி‌ஷயங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும். தீய வி‌ஷயங்களை கற்க பயன்படுத்தக்கூடாது.


தமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில் தான் படித்தவர்கள் அதிகம் உள்ளனர். ஆனால், இங்கு தான் அதிகமான விவாகரத்து வழக்குகளும் பதிவுசெய்யப்படுகிறது என்பது வருத்தத்திற்குரிய ஒன்று. தற்போது வரையில் 900 விவாகரத்து வழக்குகள் நிலுவையில் உள்ளது. கணவன், மனைவிக்கு இடையே சகிப்புதன்மை, விட்டுக்கொடுத்தல், அமைதியை கடைப்பிடிப்பதன் மூலம் விவாகரத்துகளை தவிர்க்கவேண்டும்.


 ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி மாணவ–மாணவிகள் சமூகத்தில் நல்லதொரு மனிதராக வளர்ந்து மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். மேலும், அடிப்படை சட்டங்கள், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் மற்றும் அவற்றை பற்றி விழிப்புணர்வு மாணவர்களுக்கு இருக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் லிசபெத், துணை முதல்வர் அஜின்ஜோஸ், ஆசிரிய–ஆசிரியர்கள், மாணவ–மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்