டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு; நள்ளிரவு வரை பொதுமக்கள் சாலை மறியல்

குலசேகரம் அருகே டாஸ்மாக் கடை திறப்பதை எதிர்த்து நள்ளிரவு வரை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2017-08-12 22:15 GMT
குலசேகரம்,

குலசேகரம் பகுதியில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக புதிய கடைகள் ஆங்காங்கே திறக்கப்பட்டு வருகிறது. குலசேகரத்தில் இருந்து பொன்மனை செல்லும் சாலையில் ஏற்கனவே 2 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இதனை மூடவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கருங்கலில் மூடப்பட்ட ஒரு டாஸ்மாக் கடையை பொன்மனை சாலையில் வலியாற்றுமுகம் பகுதியில் திறக்க ஊழியர்கள் ஏற்பாடு செய்தனர். இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

பொது மக்களின் எதிர்ப்பையும் மீறி அங்கு கடையை  திறக்க நேற்றுமுன்தினம் அதிரடி ஏற்பாடுகள் நடந்தன. மாலையில் கடைக்கு தேவையான மது பானங்கள் ஒரு வாகனத்தில் கொண்டுவரப்பட்டன. இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த ஆண்களும், பெண்களும் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் வாகனத்தை முற்றுகையிட்டு, மது பாட்டில்களை கடையில் இறக்க கூடாது என்றுகூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அந்த பகுதி பொதுமக்கள் டாஸ்மாக் கடை முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.  டாஸ்மாக் கடைக்கு இடம் கொடுத்த நபருடனும் வாக்குவாதம் செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்து நள்ளிரவு வரை அங்கேயே அமர்ந்து இருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரம் போலீசாரும், டாஸ்மாக் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் அங்கு கடை அமைக்கப்படாது என கூறினர். இதையடுத்து நள்ளிரவு பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்