எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆய்வுக்கூட்டம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் நடந்தது

நாகையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆய்வுக்கூட்டம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் நடந்தது.

Update: 2017-08-12 22:45 GMT
நாகப்பட்டினம்,

நாகையில் அடுத்த மாதம் 20-ந் தேதி எம்.ஜி.ஆர். நுாற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கினார். கோபால் எம்.பி., மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசும் போது கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் அடுத்த மாதம்(செப்டம்பர்) 20-ந் தேதி பாலையூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதே மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் விருப்பமாகும். அதன்படி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மாவட்டங்கள் தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

விளையாட்டு போட்டிகள்

விழாவின் முக்கிய அம்சமாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளிலும் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக மாரத்தான் போட்டி நடத்த வேண்டும். இந்த போட்டிகள் ஒன்றிய அளவிலும், மாவட்ட அளவிலும் நடத்தவேண்டும். அனைத்து போட்டிகளையும் வருகிற 27-ந்தேதிக்குள் நடத்தி முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ரத்ததான முகாம், சிறப்பு மருத்துவ முகாம், புகைப்பட கண்காட்சி, கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகள் நடத்த வேண்டும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட அனைத்துதுறை அரசு அலுவலர்களும் ஒத்துழைப்்பு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கண்காணிப்பு அலுவலகத்தினை அமைச்சர் ஓ.எஸ் மணியன் திறந்து வைத்தார்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் பவுன்ராஜ்(பூம்புகார்), பாரதி(சீர்காழி), ராதாகிருஷ்ணன்(மயிலாடுதுறை), தமிமுன்அன்சாரி (நாகை), போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய், மாவட்ட வருவாய் அலுவலர் கருணாகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், உதவி கலெக்டர் கண்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்