தஞ்சையில் 1½ மணி நேரம் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி

தஞ்சையில் 1½ மணி நேரம் பலத்த மழை கொட்டியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2017-08-12 23:00 GMT
தஞ்சாவூர்,

தமிழகத்தில் கோடை காலம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

தஞ்சை மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. பகல் நேரத்தில் வெயில் அடிப்பதும் இரவு நேரத்தில் மழை பெய்வதுமாக உள்ளது. நேற்று காலை முதல் வெயில் அடித்தது. மாலையில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டன.

இந்தநிலையில் தஞ்சையில் நேற்று இரவு 7.30 மணி அளவில் மழை பெய்யதொடங்கியது. பின்னர் பலத்த மழையாக கொட்டியது. தொடர்ந்து காற்றும் வீசியதால் மழையின் வேகமும் அதிகரித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதியான தஞ்சை மேரீஸ்கார்னர் கீழ்பாலம் பகுதியில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி காணப்பட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தஞ்சை அண்ணாசிலை பகுதியிலும் மழைநீர் தேங்கி காணப்பட்டது. பல்வேறு இடங்களில் சாக்கடை நீர் மழைநீருடன் கலந்து சாலையில் சென்றது. இதே போல் தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, திருவையாறு, வல்லம், அய்யம்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் பலத்த மழைபெய்தது. தஞ்சையில் இரவு 9 மணி வரை, அதாவது 1½ மணி நேரம் பலத்த மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வந்தது. இந்த நிலையில் மழை பெய்யத்தொடங்கி இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் தற்போது குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவது குறுவை சாகுபடிக்கு ஏற்றதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்