மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க வேண்டும் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் தீர்மானம்

விருதுநகர் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

Update: 2017-08-12 23:45 GMT
விருதுநகர்,

லுவலர் சங்கத்தின் 18–வது ஆண்டு விழா மற்றும் பேரவை கூட்டம் விருதுநகரில் நேற்று நடைபெற்றது. விருதுநகர் கிளை தலைவர் போஸ் தலைமை தாங்கினார். செயலாளர் நாகராஜன் வரவேற்று பேசினார். இணை செயலாளர் குருசாமி ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ராஜகோபால் வரவு–செலவு கணக்கை சமர்ப்பித்தார். ஆண்டு மலரை தனியார் மருத்துவ சங்கத்தின் தலைவர் ஜூவன் வெளியிட, ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் சாகுல்அமீது பெற்றுக்கொண்டார். விழாவில் மாநில பொதுச்செயலாளர் மோகன், விருதுநகர் மாவட்ட தலைவர் ராமராசு, மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

தமிழக அரசின் ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் தற்போது வழங்கப்பட்டுவரும் மருத்துவ காப்பீட்டுத்திட்டம் உதவி தொகையினை ரூ.4 லட்சம் வழங்கும் வகையில் அரசாணை வெளியிடவும், இத்திட்டத்தினை நகராட்சி, ஊராட்சி, காதிபோர்டு மற்றும் தமிழக அரசின் ஆளுமைக்குட்பட்ட நிறுவனங்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும்.

ஆண், பெண் அலுவலர்களின் மரணத்திற்கு பின் அவர்களது மனைவி மற்றும கணவன் மறுமணம் செய்து கொண்டாலும் அவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கிட மராட்டிய மாநிலம் அரசாணை பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழகஅரசின் குடும்ப ஓய்வூதியர்களுக்கு வழங்கிட ஆணை பிறக்கப்பிக்க வேண்டும்.

மத்தியஅரசின் உதவியுடன் தமிழகத்தில் தொடங்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை விருதுநகர் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரையில் தொடங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதோடு விருதுநகரில் அரசு மருத்துவகல்லூரியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்