ஆட்டோ டிரைவரை தாக்கிவிட்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட குடிநீர் லாரி டிரைவர்கள்
ஆட்டோ டிரைவரை தாக்கியதுடன், அதை மறைக்க குடிநீர் லாரி டிரைவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
ராயபுரம்,
சென்னை கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 24), ஆட்டோ டிரைவரான இவரது வீட்டின் வழியாக நேற்று முன்தினம் இரவு குடிநீர் டாங்கர் லாரி வந்தது. அந்த லாரியை கொருக்குப்பேட்டை, ஜெ.ஜெ. நகரை சேர்ந்த ஜெய்சிங் என்பவர் ஓட்டிவந்தார். கிளீனராக ஜெயசூர்யா இருந்தார்.
புருஷோத்தமன் ஆட்டோ அங்கு நின்றிருந்ததால் குடிநீர் லாரி செல்லமுடியவில்லை. இதனால் ஜெய்சிங், ஜெயசூர்யா ஆகியோர் ஆட்டோவை தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதில் ஆட்டோ சேதமடைந்தது. இதைப் பார்த்த புருஷோத்தமன் அவர்களிடம் சண்டை போட்டார். இதில் புருஷோத்தமனை ஜெய்சிங், ஜெயசூர்யா ஆகியோர் அடித்ததாக தெரிகிறது.
வேலைநிறுத்தம்இதைப் பார்த்த அப்பகுதியினர் லாரி டிரைவரையும், கிளீனரையும் தாக்கினார்கள். இதுதொடர்பாக லாரி டிரைவர் ஜெய்சிங் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் புருஷோத்தமனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் டிரைவர் ஜெய்சிங்கை தாக்கிவிட்டதாக கூறி அந்த பகுதியில் அனைத்து குடிநீர் லாரிகளையும் இயக்கமால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல அப்பகுதி மக்கள் புருஷோத்தமனுக்கு ஆதரவாக எண்ணூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் லாரிகள் வராததால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். குடிநீர் லாரி டிரைவர்கள் வேலைநிறுத்தம் செய்வதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.