ஈஞ்சம்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை கொள்ளை

ஈஞ்சம்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2017-08-12 22:15 GMT

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் 15–வது தெருவைச் சேர்ந்தவர் பிரபு(வயது 48). இவருடைய மனைவி சுமதி. இவர்கள், ஒக்கியம்பேட்டை மற்றும் கிண்டியில் பெண்கள் விடுதி நடத்தி வருகின்றனர்.

சுமதியின் தாய் சகுந்தலா, திருவான்மியூரில் வசித்து வருகிறார். பிரபு வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் திருவான்மியூருக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பி வந்தார்.

60 பவுன் திருட்டு

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த துணிகள் அறையில் சிதறி கிடந்தன. பீரோவில் சோதனை செய்த போது அதில் வைத்து இருந்த 60 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

பிரபு குடும்பத்துடன் திருவான்மியூர் சென்று இருப்பதை அறிந்து கொண்ட மர்மநபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசையை காட்டி உள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கைரேகை நிபுணர்கள், மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.

இதுபற்றி நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்