மாதவரம் அருகே அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டிய குடிசைகள் அகற்றம்

சென்னை மாதவரம் அருகே ரூ.150 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த குடிசைகள் மற்றும் வீடுகளை வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர்.

Update: 2017-08-12 23:15 GMT

செங்குன்றம்,

சென்னை மாதவரம்–மணலி 200 அடி சாலையில் மாதவரம் பால்பண்ணை அருகே அரசுக்கு சொந்தமான 20 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. இங்கு நிலத்தில் அரசு தொழிற்சாலை அமைப்பதற்காக ஒதுக்கி உள்ளது.

இந்தநிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிலர் இந்த நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்து ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை விற்பனை செய்தது. நிலத்தை வாங்கியவர்கள் அங்கு வீடுகள் கட்டினர். மேலும், சிலர் தாங்களாகவே இடத்தை ஆக்கிரமித்து குடிசைகள் அமைத்தனர். இதனால் 15 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.

இதற்கிடையே, அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் முத்து (பொறுப்பு) உத்தரவின்பேரில், நேற்று மதியம் மாதவரம் தாசில்தார் முருகானந்தம், துணை தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் வினோத்குமார், கிராம நிர்வாக அலுவலர் லெனின் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு ஆக்கிரமிப்பை அகற்ற சென்றனர்.

ரூ.150 கோடி

அப்போது அதிகாரிகளுக்கும், குடிசைகள் அமைத்து இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதையடுத்து அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. 300–க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் குடிசைகள் இருப்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 15 ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ.150 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்