கலந்தபனை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா திரளான பக்தர்கள் தரிசனம்

கலந்தபனை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2017-08-12 20:30 GMT

பணகுடி,

கலந்தபனை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கலந்தபனை சுடலை ஆண்டவர்

நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த கலந்தபனை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா, கடந்த 4–ந் தேதி கால்கோள் நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மதியம் அன்னதானம், இரவு 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும், அதன் பின்னர் சமய சொற்பொழிவுகளும், கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் கொடை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு பக்தர்கள் கன்னியாகுமரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர். 10 மணிக்கு பத்திரகாளியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடந்தது. அதன் பின்னர் சுவாமிக்கு பாலாபிஷேகம், தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பொங்கல் வழிபாடு

பின்னர் இரவு 7 மணிக்கு தீபாராதனை, வில்லிசை மற்றும் சிறப்பு பூஜைககளும், நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடந்தது. விழாவையொட்டி நட்சத்திர கலை இரவு நிகழ்ச்சிகளும் நடந்தது. விழாவில் பணகுடி, வள்ளியூர், நாங்குநேரி, நாகர்கோவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று காலை பொங்கல் வழிபாடு, மதியம் சுவாமி வீதி உலா, அசைவ அன்னதானமும் நடந்தது. கொடை விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா தங்கவேலு, நிகழ்ச்சி அமைப்பாளர்கள் டாக்டர் முத்துகிருஷ்ணன், முன்னாள் தெற்கு வள்ளியூர் பஞ்சாயத்து தலைவர் கண்ணன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்