விக்கிரமசிங்கபுரம் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் போலீஸ் பாதுகாப்புடன் கடை திறப்பு

விக்கிரமசிங்கபுரம் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2017-08-12 20:30 GMT

விக்கிரமசிங்கபுரம்,

விக்கிரமசிங்கபுரம் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடை திறக்கப்பட்டு விற்பனை நடந்தது.

கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே டானா– ஆம்பூர் ரோட்டில் பழைய திரையரங்கு அருகே கடந்த மே மாதம் 27–ந் தேதி டாஸ்மாக் கடை திறக்கப்பட இருந்தது. அப்போது பொதுமக்கள் எதிர்ப்பால் அந்த கடை திறக்கப்படவில்லை. இதையடுத்து அதே இடத்தில் கடை திறக்க உரிமை கேட்டு, கோர்ட்டில் அனுமதி பெற்று நேற்று மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

இதனை கேள்விப்பட்டதும் பா.ஜ.க. நகர செயலாளர் தங்கேசுவரன், பசுக்கிடைவிளை ஊர் தலைவர் பரமசிவன், அகஸ்தியர்புரம் சேகர், முன்னாள் கவுன்சிலர் டேவிட் டேனியல், இளைஞர் அணி செயலாளர் டேனியல் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இப்பகுதி வழியாக பள்ளி மாணவ–மாணவிகள் செல்வதாகவும், மேலும் சமூக விரோத செயல்கள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் எனவே மதுக்கடையை மூடக்கோரியும் கோ‌ஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்த தகவல் அறிந்ததும் அம்பாசமுத்திரம் துணை போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில், பொதுமக்களுக்கு இடையூறு எதுவும் இல்லாமல் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்றார். ஆனாலும் அதனை பொதுமக்கள் ஏற்காமல், கடை அருகே நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடையில் விற்பனை நடந்தது. இதனால் குடிமகன்கள் ஏராளமானோர் வந்து தங்களுக்கு பிடித்தமான மது வகைகளை வாங்கிச் சென்றனர். போலீஸ் பாதுகாப்புக்கு இடையேயும் டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்