பணகுடி சுற்று வட்டாரத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
பணகுடி சுற்று வட்டாரத்தில் மோட்டார்சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 மோட்டார்சைக்கிள்களை போலீசார் மீட்டனர்.;
பணகுடி,
பணகுடி சுற்று வட்டாரத்தில் மோட்டார்சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 மோட்டார்சைக்கிள்களை போலீசார் மீட்டனர்.
மோட்டார்சைக்கிள் திருட்டுநெல்லை மாவட்டம் பணகுடி அழகியநம்பிபுரத்தை சேர்ந்தவர் அகிலன் (வயது 42). கார் டிரைவர். இவர் கடந்த 10–ந் தேதி பணகுடி மெயின் ரோட்டில் தனது மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு, பக்கத்தில் உள்ள மருந்து கடையில் மருந்து வாங்கி கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் அங்கு வந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் அகிலனின் மோட்டார்சைக்கிளை திருடிச் சென்று விட்டார்.
இதுகுறித்து பணகுடி போலீசில் அகிலன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று காவல்கிணறு சந்திப்பில் பணகுடி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், பயிற்சி சப்–இன்ஸ்பெக்டர் விமல்குமார் ஆகியோர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
2 பேர் கைதுவிசாரணையின் போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து போலீசார் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவர் பணகுடியை அடுத்த கலந்தபனை தெற்கு தெருவை சேர்ந்த பொன்ராஜ் மகன் ஸ்டாலின் (33) என்பதும், அவர் தனது நண்பர் அதே ஊரைச் சேர்ந்த ராசையா மகன் மோகன் (37) என்பவருடன் சேர்ந்து அகிலன் மோட்டார்சைக்கிள் உள்பட 6 மோட்டார்சைக்கிள்களை திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அகிலன், மோகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் கொடுத்த தகவல்களின் பேரில் 6 மோட்டார்சைக்கிள்களையும் போலீசார் மீட்டனர்.