திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆவணி திருவிழா கொடியேற்றம்முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.
பின்னர் கொடிப்பட்டம் கோவிலில் இருந்து புறப்பட்டு, ஒன்பது சந்திகளுக்கும் வீதி உலா சென்று, மீண்டும் கோவிலுக்கு வந்தது. தொடர்ந்து கொடிப்பட்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதிகாலை 5.15 மணிக்கு கோவில் 2–ம் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் காப்பு கட்டிய சண்முகசுந்தர பட்டர் ஆவணி திருவிழா கொடியேற்றினார்.
தொடர்ந்து கொடிமர பீடத்துக்கு எண்ணெய், தைலம், திரவிய பொடி, மஞ்சள் பொடி, மாபொடி, இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பால், பன்னீர், விபூதி, சந்தனம் மற்றும் பூஜையில் வைக்கப்பட்ட கும்ப கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கொடிமர பீடம் தர்ப்பை புற்களாலும், வண்ண மலர்களாலும், பட்டு ஆடைகளாலும் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்துக்கு சோடஷ தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
உழவாரப்பணிமாலையில் அப்பர் சுவாமிகள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வீதிகளில் உழவாரப்பணி செய்து கோவிலை சேர்ந்தார். இரவில் ஸ்ரீபெலிநாயகர் அஸ்திரதேவருடன் தந்த பல்லக்கில் கோவிலில் இருந்து புறப்பட்டு, ஒன்பது சந்திகளிலும் வீதி உலா வந்து, மீண்டும் கோவிலை சேர்ந்தார்.
விழாவில் செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, திருவாவடுதுறை ஆதீனம் காஞ்சீபுரம் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமி, கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொறுப்பு) பரஞ்சோதி, உதவி ஆணையர் அருணாசலம், உள்துறை கண்காணிப்பாளர் பத்மநாபபிள்ளை, மேலாளர் அய்யாபிள்ளை, பிராமணர் சங்க ஆலோசகர் கிருஷ்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேரோட்டம்தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி– அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 7–ம் திருநாளான வருகிற 18–ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலையில் சுவாமி சிவப்பு நிற பட்டு உடுத்தி, சிவன் அம்சமாக தங்க சப்பரத்தில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
8–ம் திருநாளான 19–ந்தேதி அதிகாலையில் சுவாமி வெண்பட்டு அணிந்து, பிரம்மன் அம்சமாக வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். மதியம் சுவாமி பச்சை நிற பட்டு உடுத்தி, பெருமாள் அம்சமாக பச்சை நிற கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 10–ம் திருநாளான 21–ந்தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் (பொறுப்பு) பரஞ்சோதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.