மறைமலைநகர் அருகே மனைவியை கொலை செய்த வழக்கில் கணவர் கைது
காஞ்சீபுரம் மாவட்டம், மறைமலைநகரை அடுத்த கரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 50). இவர் மறைமலைநகர் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
வண்டலூர்,
இவரது மனைவி சரஸ்வதி (45), கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் பேச்சுவார்த்தை இல்லாமல் ஒரே வீட்டில் தனது மகனுடன் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 9–ந் தேதி காலையில் கூடுவாஞ்சேரியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்ற சரஸ்வதி இரவு தாமதமாக வீட்டுக்கு வந்துள்ளார். ஏற்கனவே தனது மனைவி மீது சந்தேகத்துடன் இருந்த சந்திரன் வீட்டிற்கு தாமதமாக வந்த காரணத்தை வைத்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சரஸ்வதியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதில் சரஸ்வதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சந்திரனை தனிப்படை அமைத்து தேடிவந்தனர். இந்த நிலையில் சிங்கபெருமாள் கோவில் அருகே நின்று கொண்டிருந்த சந்திரனை மறைமலைநகர் போலீசார் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.