கழிவுநீரை சுத்திகரித்து ஏரிகளில் நிரப்பும் திட்டத்தால் நிலத்தடி நீர் மட்டம் உயரும்

கழிவுநீரை சுத்திகரித்து, அதனை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்று முதல்–மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.;

Update:2017-08-12 04:28 IST

பெங்களூரு,

பெங்களூரு ஹெப்பால், நாகவாரா, உளிமாவு போன்ற பகுதியில் ஓடும் சாக்கடை கால்வாய் கழிவுநீரை தேவனஹள்ளி பகுதியில் தேக்கி வைத்து, அதனை சுத்திகரித்து பெங்களூரு வடக்கு, பெங்களூரு புறநகர், சிக்பள்ளாப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை தொடங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா தேவனஹள்ளியில் நேற்று காலையில் நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்ட முதல்–மந்திரி சித்தராமையா கழிவுநீரை சுத்திகரித்து ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும் தேவனஹள்ளி, பெங்களூரு புறநகர் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகளை முதல்–மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார். பின்னர் தேவனஹள்ளி அரசு கல்லூரி மைதானத்தில் நடந்த விழாவை சித்தராமையா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதன்பிறகு அவர் பேசியதாவது:–

பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் உள்ள தேவேனஹள்ளியில் ஒரே நாளில், பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்பு ஆட்சியில் இருந்த எந்த ஒரு அரசும் இதுபோன்று செய்ததில்லை. தேவனஹள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டது. பெங்களூருவில் ஏற்கனவே நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்து விட்டது. எனவே கழிவுநீரை சுத்திகரித்து, அதனை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். விவசாயம் உள்ளிட்ட பணிகளுக்காக இந்த திட்டத்தை அரசு செயல்படுத்தினாலும், நிலத்தடி நீர் மட்டம் உயருவதற்கும் இந்த திட்டம் பயன் உள்ளதாக இருக்கும்.

இந்தியாவிலேயே கர்நாடகத்தில் தான் முதல் முறையாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கோலார் மாவட்டத்தில், ஏரிகளில் தண்ணீர் நிரப்பும் திட்டம் 40 சதவீதம் நிறைவடைந்துள்ளது. அதுபோல, பெங்களூரு வடக்கு, பெங்களூரு புறநகரில் ஏரிகளில் தண்ணீர் நிரப்பும் பணி 18 மாதங்களில் முடிவடையும். கோலார், ராமநகர், சிக்பள்ளாப்பூர், துமகூரு, பெங்களூரு புறநகர் மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக ரூ.13 ஆயிரம் கோடி செலவில் எத்தினஒலே திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் நிறைவு பெற்றால் 5 மாவட்டங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது

ஏரிகளை பொது பயன்பாட்டுக்காக அரசு அளிக்க இருப்பதாக வெளியான தகவல் உண்மை அல்ல. அதுபோன்ற ஒரு திட்டமும் அரசிடம் இல்லை. ஏரிகளை பொது பயன்பாட்டுக்கு அளிக்க இருப்பதாக அரசு மீது எதிர்க்கட்சிகள் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவினர் 150 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைப்போம் என்று கூறி வருகிறார்கள். மக்கள் பா.ஜனதாவுக்கு ஓட்டுப்போட்டால் தானே 150 இடங்களில் வெற்றி பெற முடியும்.

காங்கிரஸ் அரசின் சாதனைகளை மக்கள் பாராட்டி வருகிறார்கள். அதனால் கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். விவசாயிகள் தற்கொலையை தடுக்க, கூட்டுறவு வங்கிகளில் அவர்கள் வாங்கிய ரூ.50 ஆயிரம் வரையிலான கடனை மாநில அரசு தள்ளுபடி செய்துள்ளது. அதுபோல, விவசாயிகள் மீது மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசுக்கு அக்கறை இருந்தால், தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய உத்தரவிடட்டும். ஆனால் தேசிய வங்கிகளில் விவசாயக்கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு தயாராக இல்லை. இதன்மூலம் விவசாயிகள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

மேலும் செய்திகள்