உடல் நலக்குறைவால் பாதிப்பு சிங்கப்பூர் மருத்துவமனையில் குமாரசாமி அனுமதி

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள குமாரசாமி, சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.;

Update: 2017-08-11 22:45 GMT

பெங்களூரு,

ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவராக இருந்து வருபவர் குமாரசாமி. இவர் மூச்சு திணறல் மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வருகிறார். சமீபத்தில் உப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள குமாரசாமி சென்றபோது, அங்கு தொண்டர்கள் பட்டாசு வெடித்தார்கள். அப்போது அவருக்கு மூச்சு திணறல் மற்றும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், குமாரசாமி மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதற்காக அவர் சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சிகிச்சை முடிந்ததும் இன்னும் ஓரிரு நாட்களில் குமாரசாமி பெங்களூரு திரும்ப இருக்கிறார்.

குமாரசாமி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் வழக்கமான பரிசோதனைக்காக தான் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றிருப்பதாகவும், அதனால் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் ஆதங்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் குமாரசாமி கடந்த ஆண்டும் (2016) உடல் நலக்குறைவு காரணமாக சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சை பெற்று பெங்களூரு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்