200 பேரிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்தவர் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 200 பேரிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2017-08-11 22:06 GMT

மும்பை,

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 200 பேரிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். அவர் வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது பெங்களூரு விமான நிலையத்தில் போலீசாரிடம் சிக்கினார்.

மும்பை சிவ்ரி பகுதியை சேர்ந்தவர் சபீரா அப்துல்கானி. சில மாதங்களுக்கு முன் இவரது வீட்டு அருகே அப்துல் ரசித்(வயது53) என்பவர் வாடகைக்கு குடியேறினார். அவருடன் சபீரா அப்துல்கானிக்கு அறிமுகம் உண்டானது. அப்துல் ரசித் தான் சி.பி.ஐ. அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதாக கூறினார்.

தனக்கு மேற்காசிய நாடுகளில் அதிகளவில் சொத்துகள் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் துபாயில் உள்ள தனது பங்களா வீடுகள் என்று கூறி சில புகைப்படங்களையும் சபீரா அப்துல்கானியிடம் காண்பித்து இருக்கிறார்.

இந்தநிலையில் அப்துல் ரசித், சபீரா அப்துல்கானிக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதை நம்பிய அவர் தனக்கு தெரிந்த மேலும் 53 பேரை அப்துல் ரசித்திடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அப்போது அவர்கள் அனைவருக்கும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறிய அப்துல் ரசித், ஒவ்வொருவரிடமும் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை அட்வான்சாக வாங்கி உள்ளார்.

இந்தநிலையில் அண்மையில் அவர் பையுடன் வெளியே கிளம்புவதை கவனித்த சபீரா அப்துல்கானி இதுபற்றி விசாரித்த போது, உங்கள் அனைவருக்கும் வெளிநாடு செல்ல விமான டிக்கெட் எடுக்க செல்வதாக கூறி சென்றார். அதன்பின்னர் அவர் திரும்பி வரவேயில்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சபீரா அப்துல்கானி இதுபற்றி ஆர்.ஏ.கே. போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் ரசித்தை வலைவீசி தேடிவந்தனர். இந்தநிலையில், அவர் துபாய்க்கு தப்பிச்செல்வதற்காக பெங்களூரு விமான நிலையத்திற்கு வர உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மும்பை போலீசார் உள்ளூர் போலீசாருக்கு இதுபற்றி தகவல் கொடுத்தனர்.

இந்தநிலையில், அங்கு வந்த அப்துல் ரசித்தை விமான நிலைய நுழைவு வாயிலில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதற்கிடையே ஆர்.ஏ.கே. போலீசார் அவரது வாடகை வீட்டில் நடத்திய அதிரடி சோதனையில் அங்கிருந்த 200 பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், அவர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 200 பேரிடம் இதே பாணியில் ரூ.40 லட்சம் வரை மோசடி செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை மும்பை அழைத்து வந்து விசாரணை நடத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்