திருபுவனை பகுதியில் சாராயக் கடைகளை சூறையாடி கிராம மக்கள் போராட்டம்

திருபுவனை பகுதியில் சாராயக் கடைகளை சூறையாடி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-08-11 23:30 GMT

திருபுவனை,

நெடுஞ்சாலையோரம் உள்ள மதுக்கடை, சாராயக் கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து புதுவை மாநிலத்தில் நெடுஞ்சாலையோரம் இருந்த மதுக்கடைகள், சாராயக் கடைகள் மூடப்பட்டன. இந்த கடைகள், கிராமப்புற பகுதியில் திறக்கப்பட்டு வருகின்றன. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு விதமான போராட்டங்கள் நடத்தினர்.

இந்த நிலையில் திருபுனை பகுதியில் மதகடிப்பட்டு சந்தைதோப்பு பகுதியில் இருந்த சாராயக் கடையை மதகடிப்பட்டு – கடலூர் சாலையில் உள்ள நல்லூர் கிராமத்தில் அமைக்க அதன் உரிமையாளர் ஏற்பாடு செய்து வந்தார். இப்பகுதியில் விவசாய நிலங்கள், நெற்களம் ஆகியவை உள்ளது. மேலும் வீட்டுமனை பட்டா வழங்க அப்பகுதி இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அந்த இடத்தில் சாராயக் கடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி நேற்று காலை சாராயக்கடை திறக்கப்பட்டது. இதை அறிந்த நல்லூர் கிராம மக்கள் சுமார் 100–க்கும் மேற்பட்டவர்கள் சாராயக்கடைக்கு திரண்டு வந்தனர். அவர்கள் அங்கு இருந்த சாராய கேன்களை அடித்து நொறுக்கினர். சாராயத்தை சாலையில் கொட்டி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த திருபுவனை போலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர் தான் கையில் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை திறந்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த போலீசார், அவரிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பிடுங்கினர். அவர் மீது தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சாராயக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கலால் துறையிடம் புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். இதையடுத்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் நல்லூர் பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவண்டார்கோவில் சின்னபேட் பகுதியில் உள்ள சாராயக் கடையை மூடக்கோரி கிராம மக்கள் புதுவை – விழுப்புரம் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருபுவனை உதவி சப்–இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கிடையில் அதே பகுதியை சேர்ந்த சித்திரை (வயது 43) என்பவர் சாராயக்கடையில் சாராயம் வாங்கி குடித்தபோது, அவரை பாம்பு கடித்துவிட்டதாக தகவல் பரவியது. இதனால் ஆத்திரமடைந்த ஆண்களும், பெண்களும் ஒன்று திரண்டு சாராயக் கடையை அடித்து நொறுக்கினர். அங்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பெட்டிகளை உடைத்து சூறையாடினர். சித்திரையை கடித்த பாம்பையும் அவர்கள் அடித்து கொன்றனர்.

இவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். திருபுவனை பகுதியில் ஒரே நாளில் இரண்டு இடங்களில் சாராயக் கடைகள் சூறையாடப்பட்ட சம்பவத்தால் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்