மயிலம் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது; ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பலி

மயிலம் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பலியானார். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2017-08-11 22:30 GMT

மயிலம்,

அரியலூர் மாவட்டம் பொட்டக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சாமிதுரை (வயது 55). ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர். இவர் தனது சொந்தவேலை காரணமாக உறவினர்களுடன் காரில் சென்னைக்கு சென்றார். பின்னர் மீண்டும் அதே காரில் அவர்கள் நேற்று ஊர் திரும்பினர். காரை பொட்டக்கொல்லையை சேர்ந்த பிரபாகரன் (35) ஓட்டினார்.

மயிலம் அருகே பாலப்பட்டு என்ற இடத்தில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவில் இருந்த தடுப்பு கட்டையில் மோதியது. மோதிய வேகத்தில் அந்த கார் சாலையின் மறுபுறத்துக்கு சென்று அங்கு சாலையோர மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சாமிதுரை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் அவருடைய உறவினர்கள் சிவசாமி, பஞ்சநாதன், கற்பகம், சஞ்சிதா, வில்வநாதன், அடைக்கலராஜ், நிதிஸ் மற்றும் டிரைவர் பிரபாகரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் மயிலம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்தில் இறந்த சாமிதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்