துக்க வீட்டுக்கு சென்ற போது விபத்து: மரத்தில் கார் மோதி கோவை பெண் சாவு

துக்க வீட்டுக்கு சென்றபோது மரத்தில் கார் மோதி கோவை பெண் பரிதாபமாக இறந்தார். அவரது கணவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2017-08-11 22:30 GMT
ஆறுமுகநேரி,

கோவை மாவட்டம் காரமடையைச் சேர்ந்தவர் அம்சத் உசைன் (வயது 60). இவர் அங்குள்ள பள்ளிவாசலில் இமாமாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி முஸ்கா மைமூன் (55). இவர்களுடைய உறவினர் ஒருவர், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள சீருடையார்புரத்தில் இறந்து விட்டார்.

எனவே அம்சத் உசைன், முஸ்கா மைமூன் ஆகிய 2 பேரும் துக்க வீட்டுக்கு செல்வதற்காக, நேற்று முன்தினம் இரவில் தங்களது காரில் புறப்பட்டனர். கோவை போத்தனூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் (30) காரை ஓட்டி வந்தார்.

நேற்று அதிகாலை 5 மணி அளவில் ஆறுமுகநேரிஅருகே முக்காணி வடபுறம் கார் வந்த போது திடீரென்று டிரைவரது கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. அங்குள்ள இசக்கி அம்மன் கோவில் அருகில் சாலையோரம் நின்ற மரத்தில் கார் பயங்கரமாக மோதியது.

இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. காரில் இருந்த அம்சத் உசைன், முஸ்கா மைமூன், டிரைவர் அபுபக்கர் சித்திக் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று, காரின் இடுபாடுகளுக்குள் சிக்கிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்லும் வழியிலேயே முஸ்கா மைமூன் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தில் படுகாயம் அடைந்த அம்சத் உசைன், அபுபக்கர் சித்திக் ஆகிய 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்