தென்பெண்ணை ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

தென்பெண்ணை ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2017-08-11 22:30 GMT
வாணாபுரம்,

தென்பெண்ணை ஆறு கர்நாடகா மாநிலம் நந்திகேசவ மலையடிவாரத்தில் இருந்து உருவாகி வருகிறது. இந்த ஆற்றில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் கரை புரண்டு ஓடியது. தற்போது வறண்டு பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது. தென்பெண்ணை ஆறு திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களை மையமாக கொண்டது.

இந்த ஆற்றில் மழை காலங்களில் வரும் தண்ணீரை பயன்படுத்தி சுற்றுவட்ட பகுதியை சேர்ந்த விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் திருவண்ணாமலை மாவட்ட பகுதியின் குடிநீர் ஆதாரமாக விழுப்புரம் மாவட்டம் மணலூர்பேட்டை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இப்படி பல்வேறு வகையில் பயன்பட்டு வரும் இந்த தென்பெண்ணை ஆற்றில் மணல் கொள்ளை நடப்பதால் தற்போது பாறைகள் மட்டுமே காணப்படுகின்றது. இதில் திருவண்ணாமலை ஆற்றின் கரையோரப்பகுதியான சதாகுப்பம், அகரம் பள்ளிப்பட்டு, தொண்டாமனூர், வாழவச்சனூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்தவர்கள் இரவு நேரங்களில் அதிகளவில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் ஆற்றில் குடிநீருக்காக பயன்பட்டு வரும் கிணறுகள் தற்போது அபாயநிலையில் உள்ளது. மேலும் கிணற்றை சுற்றி மணல் தோண்டப்படுவதால் சிமெண்டுகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. இதுபோல் 10–க்கும் மேற்பட்ட கிணறுகள் தற்போது கீழே விடும் நிலையில் உள்ளது.

விவசாயிகள், பொதுமக்களுக்கு ஆதாரமாக விளங்கும் இந்த தென்பெண்ணை ஆற்றின் தற்போதைய நிலை பரிதாபமாக உள்ளது. நாளுக்கு நாள் பாலைவனம் போல் மாறிவரும் தென்பெண்ணை ஆற்றை பாதுகாக்க பல்வேறு அமைப்புகள் போராடியும் அதனால் எந்த விதமான பயனும் இல்லை.

எனவே, எதிர்வரும் சந்ததிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் விவசாயத்தை பாதுகாக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை சேமிக்கவும் தென்பெண்ணை ஆற்றை பாதுகாக்கவும் மணல் கொள்ளையை சிறப்பு படை அமைத்து தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்