அ.தி.மு.க. அணிகளின் இணைப்புக்கு சாத்தியம் இல்லை
அ.தி.மு.க.வின் 2 அணிகள் இணைப்புக்கு சாத்தியம் இல்லை என்று ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
மதுரை,
அ.தி.மு.க. அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ஏ.கே.போசை மாநில விவசாய அணி இணைச்செயலாளராக அறிவித்தார். அந்த பதவியை உடல்நிலை காரணம் காட்டி முதலில் ஏற்க மறுத்த ஏ.கே.போஸ், பின்னர் டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்து விட்டு கட்சி பதவியை ஏற்பேன் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் ஏ.கே.போஸ் நேற்று மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:–
நான் விரைவில் பெங்களூரு சிறையில் இருக்கும் பொதுச் செயலாளர் சசிகலாவை சந்திக்க இருக்கிறேன், அதற்கான நேரம் கேட்டுள்ளேன், அதன் பின்னர் தான் எனது முடிவை தெரிவிப்பேன். கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை நீக்கியதில் எனக்கு விருப்பமில்லை,
சசிகலாதான் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக அறிவித்தார், கட்சிக்கு டி.டி.வி.தினகரனும், ஆட்சிக்கு எடப்பாடி பழனிச்சாமியும் இருக்க வேண்டும்.
அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளின் இணைப்புக்கு சாத்தியம் இல்லை. டி.டி.வி.தினகரன் தலைமையில் மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெறும் கூட்டத்தில் நான் கலந்து கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடியில் சிறப்பு அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இதில், அமைச்சர் உதயகுமார், எம்.எல்.ஏக்கள் ராஜன்செல்லப்பா (மதுரை வடக்கு), நீதிபதி (உசிலம்பட்டி) ஆகியோருடன் ஏ.கே. போசும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்தையா பரமக்குடியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
மேலூரில் வருகிற 14–ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு பேசுகிறார். பரமக்குடியில் இருந்து 100 வாகனங்களில் 5,000 தொண்டர்கள் சென்று அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளோம். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மேலூரில் நடைபெறும் இந்த விழா தமிழக அரசியலில் மாபெரும் திருப்புமுனையையும், மாற்றத்தையும், எழுச்சியையும் ஏற்படுத்தும். டி.டி.வி. தினகரன் முதல்–அமைச்சராக அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் ஆதரவு அளிக்கும் அச்சாரமாக அமையும். வருங்கால அரசியலுக்கு புதிய தொடக்கமாக அமையும்.
தமிழக மக்களின் நன்மதிப்பையும், அ.தி.மு.க. தொண்டர்களின் நம்பிக்கையையும் பெற்று டி.டி.வி. தினகரன் அரசியல் களத்தில் போராளியாக விளங்கி வருகிறார். அ.தி.மு.க.வை கம்பீரமாக வழிநடத்தும் வல்லமை பெற்றவர் தினகரன். அ.தி.மு.க.வை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போனது தான் வரலாறு. பல சோதனைகளையும், இன்னல்களையும் தாங்கி அவற்றை வென்று சாதனை படைக்கும் இயக்கம் தான் அ.தி.மு.க., ஜெயலலிதா காட்டிய பாதையில் டி.டி.வி. தினகரன் தலைமையில் பயணம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.